மேற்கு வங்கத்தில் தவெக கட்சி அலுவலகமா? விஜய் கட்சியின் அதிகாரப்பூர்வ விளக்கம்
செய்தி முன்னோட்டம்
தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்யின் ரசிகர்கள், மேற்கு வங்க மாநிலத்தில் தவெக-வின் முதல் கிளையை தொடங்கியுள்ளதாக வெளியான செய்திகளுக்குத் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைமைக் கழகம் மறுப்பு தெரிவித்துள்ளது. மேற்கு வங்க மாநிலம் புர்பா வர்தமான் மாவட்டத்தின் ஃபகுபூர் பகுதியில், தவெக ஆதரவாளர்கள் சிலர் இணைந்து கட்சியின் புதிய அலுவலகத் திறப்பு விழாவை அண்மையில் நடத்தினர். இந்த அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளராக தம்மை அறிமுகப்படுத்திக் கொண்ட சைதாலி ராய், தமிழகத்தில் இருந்து கிடைத்த வழிகாட்டுதலின் பேரிலேயே இந்த அலுவலகம் தொடங்கப்பட்டதாகத் தெரிவித்தார். சமூக வலைத்தளப் பிரசாரம், இரத்த தானம் மற்றும் சமூகப் பணிகள் மூலம் மேற்கு வங்கத்தில் கட்சி அமைப்பை வலுப்படுத்தி, எதிர்காலத்தில் தேர்தலில் போட்டியிடுவதே இலக்கு என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
மறுப்பு
தவெக தலைமை கழகத்தின் மறுப்பு
இந்த செய்தி குறித்து பேசிய தமிழக வெற்றிக் கழகத்தின் அதிகாரப்பூர்வ செய்தி தொடர்பாளரும் வழக்கறிஞருமான சங்கவி, இந்த செய்திகளை முற்றிலுமாக மறுத்துள்ளார்.
"மேற்கு வங்கத்திலோ அல்லது பிற மாநிலங்களிலோ தவெக எந்தவொரு அதிகாரப்பூர்வக் கிளை அலுவலகத்தையும் திறக்கவில்லை. இது கட்சியின் தலைமையின் அனுமதியோ அல்லது தொடர்போ இல்லாமல் உள்ளூர் ரசிகர்களால் தச்சார்பாகத் தொடங்கப்பட்ட ஒன்று" என்று அவர் தெளிவுபடுத்தினார்.
"தவெக தற்போது தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மட்டுமே செயல்பட்டு வருகிறது. வெளிமாநிலங்களில் கட்சி அமைப்பை விரிவாக்கம் செய்யும் திட்டம் தற்போதைக்கு எதுவுமில்லை".
எனினும், தமிழக அரசியலால் ஈர்க்கப்பட்டு பிற மாநிலங்களிலும் தளபதி விஜய்க்கு ஆதரவு பெருகுவது மகிழ்ச்சியளிப்பதாகவும், அந்த ஆதரவாளர்களுக்குத் தவெக சார்பில் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதாகவும் அவர் கூறினார்.