
மதுரையில் த.வெ.க. இரண்டாவது மாநில மாநாடு இன்று: களைகட்டிய பாரபத்தி
செய்தி முன்னோட்டம்
தமிழக வெற்றி கழகத்தின் (த.வெ.க.) இரண்டாவது மாநில மாநாடு இன்று மதுரை பாரபத்தியில் பிரமாண்டமாக நடைபெறவுள்ளது. மதியம் 3:00 மணி முதல் இரவு 7:00 மணி வரை நடைபெறும் இந்த மாநாட்டின் முதல்நிகழ்வாக கட்சி தலைவர் விஜய் மேடையருகே அமைக்கப்பட்டுள்ள கொடி கம்பத்தில் கொடியேற்றி, பின்னர் தொண்டர்களிடையே உரையாடுவார். மாநாட்டில் பங்கேற்க விஜய் நேற்று மாலை சென்னையிலிருந்து காரில் மதுரை வந்து, மாநாட்டு திடலுக்கு அருகிலுள்ள ஓட்டலில் தங்கினார். அதற்கு முன், அவரது பெற்றோர் ஷோபா மற்றும் சந்திரசேகர் மதுரை வந்தடைந்தனர். அவர்கள் நேற்று மாநாட்டு மைதானத்தை பார்வையிட்டனர். மாநாட்டில் பங்கேற்க கட்சியின் தொண்டர்களும், விஜயின் ரசிகர்களும் நேற்று இரவே மாநாடு நடைபெறவுள்ள மைதானத்திற்கு கூட்டம் கூட்டமாக வரத்தொடங்கினர் என செய்திகள் தெரிவிக்கின்றன.
விவரங்கள்
பாதுகாப்பு மற்றும் மருத்துவ ஏற்பாடுகள்
மாநாட்டின் பாதுகாப்பு பணிகளில் 3,500 காவல்துறை வீரர்கள் மற்றும் 2,500 தனியார் பாதுகாப்பு வீரர்கள் பங்கேற்கின்றனர். பெண்கள் பாதுகாப்புக்காக 500 பெண் பவுன்சர்களும் களத்தில் உள்ளனர். மாநாட்டு திடலின் இருபுறமும் மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. 600 டாக்டர்கள், 45 ஆம்புலன்ஸ்கள் தயார் நிலையில் உள்ளன. வெயில் தாக்கம் காரணமாக மயக்கம், விபத்து போன்ற சம்பவங்களை எதிர்கொள்ள, கார்டியோ மற்றும் ஆர்த்தோ நிபுணர்கள் உட்பட சிறப்பு நடமாடும் மருத்துவமனைகள் களம் இறக்கப்பட்டுள்ளது. நிகழ்ச்சியில் பங்கேற்கும் தொண்டர்களுக்கு பிஸ்கெட், அரை லிட்டர் குடிநீர், மிக்சர், குளுக்கோஸ் உள்ளிட்ட பொருட்கள் அடங்கிய 2 லட்சம் நிவாரண பைகள் வழங்கப்பட உள்ளன. மாலை 3 மணிக்கு துவங்கும் மாநாடு, இரவு 7 மணி அளவில் முடிவடையும் எனக்கூறப்படுகிறது.