பெண் ஆட்சியர் விவகாரத்தில் கள்ளக்குறிச்சி தவெக எம்.எல்.ஏ அருள் விக்னேஷ் விளக்கம்
செய்தி முன்னோட்டம்
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் பத்மஜாவுக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதாகவும், நள்ளிரவில் மதுபோதையில் அவரது இல்லத்திற்கு சென்று ரகளையில் ஈடுபட்டதாகவும் எழுந்த புகார்களுக்கு கள்ளக்குறிச்சி தொகுதி தவெக எம்.எல்.ஏ அருள் விக்னேஷ் கடுமையான மறுப்பு தெரிவித்துள்ளார். திமுக எம்.பி கனிமொழி மற்றும் காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி உள்ளிட்ட பல்வேறு அரசியல் தலைவர்கள் இந்த விவகாரம் குறித்துக் கண்டனம் தெரிவித்து தீவிர விசாரணை நடத்தக் கோரிய நிலையில், எம்.எல்.ஏ அருள் விக்னேஷ் செய்தியாளர்களைச் சந்தித்து தனது தரப்பு விளக்கத்தை அளித்தார்.
விளக்கம்
"அதிகாரிகள் மீது மிகுந்த மரியாதை உண்டு"
கள்ளக்குறிச்சி புதிய பேருந்து நிலையத்தில் செவ்வாய்க்கிழமை ஆய்வுப் பணிகளை மேற்கொண்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய அருள் விக்னேஷ்,"அரசு அதிகாரிகள் மீது நான் எப்போதும் மிகுந்த மரியாதை வைத்துள்ளேன். சமூக வலைதளங்களில் பரப்பப்படுவது போன்ற எந்தவொரு தவறான செயலிலும் நான் ஈடுபடவில்லை. எதற்காக என் மீது இப்படி ஒரு பொய்யான புகா பரப்பப்படுகிறது என்று எனக்கே புரியவில்லை".
"இம்மாவட்டத்தில் தவெக சார்பில் வெற்றி பெற்ற ஒரே எம்.எல்.ஏ நான் என்பதால், என் மீதும் எங்கள் கட்சித் தலைமை மீதும் காழ்ப்புணர்ச்சி கொண்டு எதிர்க்கட்சிகள் திட்டமிட்டு இந்த அவதூறைப் பரப்பி வருகின்றன" என்றார்.
பழிவாங்கல்
"பேருந்து நிலைய ஊழலை வெளிப்படுத்தியதால் பழிவாங்கல்"
கடந்த ஆட்சிக் காலத்தில் புதிதாக கட்டப்பட்ட கள்ளக்குறிச்சி புதிய பேருந்து நிலையப் பணிகளில் நடைபெற்ற மாபெரும் ஊழல் குறித்து தான் விரிவான ஆவணங்களை சேகரித்து தமிழக முதல்வருக்கு அறிக்கை அனுப்பியதாக அவர் கூறினார்.
அந்த ஊழல் விவகாரத்தை திசைதிருப்பவும், தனது அரசியல் நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கவும் எதிர்க்கட்சிகள் இத்தகைய போலி குற்றச்சாட்டுகளைப் பரப்பி வருவதாக அருள் விக்னேஷ் குற்றம் சாட்டினார்.
தவெக எம்.எல்.ஏ-க்கள் மற்றும் அமைச்சர்கள் மீதான பல்வேறு புகார்கள் குறித்து சென்னை பனையூரில் உள்ள கட்சித் தலைமை அலுவலகத்தில் நாளை அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ள சூழலில், அருள் விக்னேஷின் இந்த விளக்கம் முக்கியத்துவம் பெறுகிறது.