'ரூ. 31 கோடி செலவு செய்தேன்': வைரல் வீடியோவுக்கு தாராபுரம் தவெக வேட்பாளர் சத்தியபாமா மறுப்பு
செய்தி முன்னோட்டம்
தாராபுரம் சட்டமன்ற இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில், "கடந்த சட்டமன்றத் தேர்தலில் நான் ரூ.31 கோடி செலவு செய்தேன்" எனத் தான் பேசுவதாக சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் வீடியோ முற்றிலும் சித்தரிக்கப்பட்டது என தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) வேட்பாளர் சத்தியபாமா திட்டவட்டமாக மறுத்துள்ளார். தாராபுரம் தொகுதிக்கு உட்பட்ட மதுக்கம்பாளையம் வாக்குச்சாவடி மையத்திற்கு இன்று காலை வந்து தனது வாக்கினைப் பதிவு செய்த சத்தியபாமா, அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்துப் பேசியபோது இந்த விளக்கமளித்தார்.
விளக்கம்
வாக்குச்சாவடியில் வாக்களித்த பின் விளக்கம்
"கடந்த தேர்தலின் போது ரூ.31 கோடி செலவு செய்து எம்.எல்.ஏ ஆனதாகப் பரப்பப்படும் வீடியோ போலியானது மற்றும் சோடிக்கப்பட்டது".
"இத்தேர்தலில் எனக்கு வெற்றி வாய்ப்பு மிகவும் பிரகாசமாக இருப்பதைப் பார்த்துப் பயந்துபோய், எதிர்த்தரப்பினர் என்னைப் பற்றி தவறான பிம்பத்தை உருவாக்க இத்தகைய போலி வீடியோக்களைத் திட்டமிட்டுப் பரப்பி வருகிறார்கள்," எனக் குற்றம் சாட்டினார்.
முன்னதாக அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றிருந்த சத்தியபாமா, தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்ததால் தாராபுரம் தொகுதி காலியானது.
தற்போது தவெக சார்பில் மீண்டும் போட்டியிடும் அவரை எதிர்த்து திமுக, அதிமுக, நாம் தமிழர் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள் களத்தில் உள்ளன.