சென்னை மக்களின் கவனத்திற்கு; மெட்ரோ ரயில் இரண்டாம் கட்ட பணிகளுக்காக போக்குவரத்தில் மாற்றம்
சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் (CMRL) பனகல் பார்க் பகுதியில் நவம்பர் 25 முதல் டிசம்பர் 1 ஆம் தேதி வரை இரண்டாம் கட்ட மெட்ரோ கட்டுமானப் பணிகளை மேற்கொள்வதால் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த மாற்றங்கள் பனகல் பார்க் மெட்ரோ நிலையத்தின் நுழைவு மற்றும் வெளியேறும் கட்டமைப்புகளை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளன. இந்நிலையில், சென்னை போக்குவரத்து காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், வெங்கட நாராயண சாலை-சிவஞானம் தெரு சந்திப்பு, ஜே.ஒய்.எம் திருமண மண்டபத்திற்கு அருகில் கட்டுமானப் பணிகள் நடைபெறும் என்பதால் நிலைமையை சமாளிக்க, ஒரு வாரத்திற்கு போக்குவரத்து மாற்றம் செய்யப்படுவதாக அறிவித்துள்ளது.
முக்கிய போக்குவரத்து மாற்றங்கள்
இதன்படி, தியாகராய வீதியில் இருந்து சிவஞானம் வீதி வழியாக வெங்கடநாராயண வீதிக்கு செல்லும் வாகனங்கள் தடைசெய்யப்படும். தியாகராய நகர் சாலை மற்றும் தணிகாசலம் சாலையை மாற்றுப் பாதையாகப் பயன்படுத்தி வெங்கட நாராயண சாலைக்கு செல்ல வாகன ஓட்டிகள் அறிவுறுத்தப்படுகிறார்கள். சிவஞானம் தெரு வழியாக, ஜே.ஒய்.எம் திருமண மண்டபம் வரை, உள்ளூர்வாசிகள் மற்றும் பயணிகள் தங்குவதற்கு இருவழி போக்குவரத்து அனுமதிக்கப்படும். இக்கால பகுதிகளில், சுமூகமான போக்குவரத்தை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகளுக்கு அதிகாரிகளுடன் ஒத்துழைக்குமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. சென்னை மெட்ரோ தற்போது தினசரி மில்லியன் கணக்கான பயணிகளுக்கு சேவை செய்து வரும் நிலையில், இரண்டாம் கட்ட கட்டுமான பணிகள் மெட்ரோ நெட்வொர்க்கை மேலும் வலுப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.