'நம் மகள்களுக்கு எந்த கொடுமையும் நடக்கக்கூடாது': பிரதமர் மோடியின் சுதந்திர தின உரை
செய்தி முன்னோட்டம்
பிரதமர் மோடி தனது 10வது சுதந்திர தின உரையை இன்று(ஆகஸ்ட் 15) டெல்லி செங்கோட்டையில் ஆற்றினார்.
ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்தில் மலர் தூவிய பின் செங்கோட்டைக்கு சென்ற பிரதமர் மோடி, அங்கு இந்திய தேசியக் கொடியை ஏற்றினார்.
இந்தியர்களை 'குடும்ப உறுப்பினர்களே!' என்று அழைத்து தன் உரையை தொடங்கிய பிரதமர் மோடி, "உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடாகவும், தற்போது மக்கள் தொகையில் முன்னணி நாடாகவும் இந்தியா உள்ளது. இவ்வளவு பெரிய நாட்டில் உள்ள எனது குடும்பத்தைச் சேர்ந்த 140 கோடி பேர் இன்று சுதந்திர தினத்தை கொண்டாடுகிறோம்" என்று கூறினார்.
திஜுவ்க்
'மணிப்பூருக்கு அமைதியின் மூலமே தீர்வு காண முடியும்'
அதன் பிறகு, "இந்தியாவின் சுதந்திரப் போராட்டத்தில் தங்கள் பங்களிப்பை வழங்கிய அனைத்து துணிச்சலான இதயங்களுக்கும் எனது அஞ்சலியை செலுத்துகிறேன்" என்று சுதந்திர போராட்ட வீரர்களை பிரதமர் மோடி நினைவு கூர்நதார்.
மணிப்பூரில் இரண்டு மாதங்களாகியும் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கும் கலவரம் குறித்து பேசிய அவர் "இந்தியா மணிப்பூர் மக்களுக்கு துணையாக உள்ளது. அமைதியின் மூலமே தீர்வு காண முடியும். மத்திய அரசும், மாநில அரசும் தீர்வு காண அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகின்றன." என்று தெரிவித்தார்.
மணிப்பூரில் ஒரு கும்பல் இரண்டு பெண்களை நிர்வாணமாக வீதியில் அழைத்து சென்று பாலியல் வன்கொடுமை செய்யும் வீடியோ சமீபத்தில் வெளியாகி நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.
பிஜியூ
'எனது தாய்மார்கள், சகோதரிகள் மற்றும் மகள்களுக்கு நன்றி'
அந்த விவகாரத்தை குறிப்பிடாமல் பேசிய பிரதமர் மோடி, "நம் மகள்களுக்கு எந்த கொடுமையும் நடக்காமல் பார்த்துக் கொள்வது நமது பொறுப்பு" என்று தெரிவித்தார்.
மேலும், பெண்கள் தலைமையிலான வளர்ச்சியின் முக்கியத்துவம் குறித்து பேசிய பிரதமர் மோடி, "பெண்கள் தலைமையிலான வளர்ச்சிதான் நாட்டை முன்னோக்கி கொண்டு செல்லும். இன்று, சிவில் ஏவியேஷன் துறையில் அதிகபட்ச விமானிகளை இந்தியா கொண்டுள்ளது என்று பெருமையுடன் கூறலாம். பெண் விஞ்ஞானிகள் சந்திரயான் பணியை வழிநடத்துகின்றனர். பெண்கள் தலைமையிலான வளர்ச்சியின் முக்கியத்துவத்தை ஜி 20 நாடுகளும் அங்கீகரித்து வருகின்றன" என்று கூறினார்.
"எனது நாட்டின் தாய்மார்கள், சகோதரிகள் மற்றும் மகள்களின் திறனுக்காக நான் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன்." என்றும் அவர் கூறினார்.
ஜெகின்
'பணவீக்கத்தை குறைக்க நடவடிக்கைகளை எடுப்போம்'
பின், நாட்டில் நிலவும் பணவீக்கம் குறித்து பேசிய அவர், "கொரோனாவில் இருந்து உலகம் இன்னும் மீளவில்லை. போர்(உக்ரைன் போர்) மற்றொரு நெருக்கடியை உருவாக்கியுள்ளது. இன்று உலகம் பணவீக்க நெருக்கடியை எதிர்கொள்கிறது. பணவீக்கம் ஒட்டுமொத்த உலகப் பொருளாதாரத்தையும் அதன் பிடியில் வைத்துள்ளது. பொருட்களை இறக்குமதி செய்யும் போது, நாம் துரதிர்ஷ்டவசமாக பணவீக்கத்தையும் இறக்குமதி செய்கிறோம். ஆனால், பணவீக்கத்தை கட்டுப்படுத்த இந்தியா அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டது. உலகின் மற்ற நாடுகளை விட நமது நிலைமை சிறப்பாக உள்ளது என்பதற்காக நாம் திருப்தியடைய முடியாது. பணவீக்கத்தின் சுமை எனது நாட்டின் குடிமக்கள் மீது விழாமல் இருக்க நான் கூடுதல் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். நாங்கள் அந்த நடவடிக்கைகளை எடுப்போம். எனது முயற்சிகள் தொடரும்" என்று கூறியுள்ளார்.
பிவெ
'2047க்குள் இந்தியாவை வளர்ச்சியடைந்த நாடாக மாற்ற வேண்டும்'
இதற்கிடையில், இந்தியாவின் வளர்ச்சி குறித்து பேசிய பிரதமர் மோடி, "இந்தியா(வளர்ச்சியை) நிறுத்தாது என்று உலக வல்லுநர்களும் அனைத்து மதிப்பீட்டு நிறுவனங்களும் நம் நாட்டைப் பாராட்டுகின்றன. உலகப் போருக்குப் பிறகு புதிய உலக ஒழுங்கு உருவானது. அதே போல், COVID-19 க்குப் பிறகு ஒரு புதிய உலக ஒழுங்கு வடிவம் பெறுவதை என்னால் பார்க்க முடிகிறது." என்று கூறினார்.
"2014ல் நாங்கள் ஆட்சிக்கு வந்தபோது, உலகின் 10வது பெரிய பொருளாதாரமாக இருந்த இந்தியா, இன்று 5வது பெரிய பொருளாதாரமாக இருக்கிறது. 2047ல், இந்தியா சுதந்திரம் அடைந்து 100 ஆண்டுகள் நிறைவடையும் போது, இந்தியாவை வளர்ச்சியடையச் செய்வதை இலக்காகக் கொள்ள வேண்டும்." என்றும் பிராட்மர் மோடி தெரிவித்துள்ளார்.