
பயணிகளுக்கு சிறந்த சேவையளிக்கும் விமான நிலையங்களில் முதலிடத்தில் நீங்கள் எதிர்பார்க்காத ஊர்
செய்தி முன்னோட்டம்
கடந்த 6 மாதங்களுக்கான விமான பயணிகள் சேவைத்தர மதிப்பீட்டில், மத்தியப் பிரதேசத்தின் போபால், கஜுராஹோ மற்றும் ராஜஸ்தானின் உதய்பூர் விமான நிலையங்கள் முதலிடத்தைப் பிடித்துள்ளன. இந்திய விமான நிலைய ஆணையம் (AAI) வெளியிட்ட தரவரிசைப் பட்டியலில் இந்த தகவல் வெளியாகியுள்ளது. ஜனவரி - ஜூன் 2025 காலக்கட்டத்தில், AAI கட்டுப்பாட்டிலுள்ள 62 விமான நிலையங்களில் 60-இல் பயணிகள் கருத்துக்களை அடிப்படையாகக் கொண்டு இந்த மதிப்பீடு நடத்தப்பட்டது. இதில், உயர்ந்த சேவை தரம், தூய்மை, பாதுகாப்பு, வசதிகள் உள்ளிட்ட பல்வேறு அளவுகோள்களின் அடிப்படையில், மூன்று விமான நிலையங்கள் 5க்கு 5 மதிப்பெண்களை பெற்று சிறப்பாக உள்ளன.
விவரங்கள்
அதிகாரிகள் கூறுவது என்ன?
கஜுராஹோ, யுனெஸ்கோ உலக பாரம்பரியச் சின்னமாக உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க கோவில்களின் நுழைவாயிலாக செயல்படுவதால், இங்கு தரமான சேவைகள் வழங்கப்படுவதாக குறிப்பிடப்படுகிறது. இதுபற்றி அதிகாரிகள் கூறுகையில், "பயணிகளிடம் நேரடியாக சேவை தொடர்பான கருத்துக்கள் கேட்கப்பட்டு, அதன் அடிப்படையில் இந்த தரவரிசை தயாரிக்கப்பட்டது. சிறிய நகரங்களில் உள்ள விமான நிலையங்களும் உயர் தர சேவைகளை வழங்கும் நிலையில் இருப்பது முக்கியமான முன்னேற்றமாகும்," என தெரிவித்தனர். இந்த நிலையில், அசாமின் ரூப்சி விமான நிலையம், வெறும் 2.5 மதிப்பெண்களுடன் பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. இந்த தரவரிசை, உள்ளூர் மற்றும் சிறிய விமான நிலையங்கள் பயணிகள் சேவையில் முன்னேறுவதற்கான கட்டுமான வளர்ச்சியையும், நிர்வாகத்தின் கவனத்தையும் வெளிக்கொணர்கிறது.