தமிழகத்தில் விரைவில் உள்ளாட்சித் தேர்தல்? மாநில தேர்தல் ஆணையம் கடிதம்
தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு விரைவில் தேர்தல் நடக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தேர்தல் நடத்துவதற்கு ஏதுவாக வாக்குப் பெட்டிகளை தயார் நிலையில் வைக்குமாறு மாவட்ட தேர்தல் அலுவலர்களுக்கு மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை உள்ளாட்சித் தேர்தல் நடக்கும் நிலையில், கடைசியாக 2019இல் 27 மாவட்டங்களுக்கு உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது. அந்த சமயத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட 9 மாவட்டங்களில் மட்டும் வார்டு வரையறை முடிந்த பின், 2021இல் தேர்தல் நடைபெற்றது. இந்நிலையில், முதலில் தேர்தல் நடைபெற்ற 27 மாவட்ட உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகளின் பதவிக்காலம் வரும் டிசம்பரில் முடிவடைகிறது.
மாவட்ட ஆட்சியர்களுக்கு கடிதம்
சென்னை தவிர மற்ற அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் மாநில தேர்தல் ஆணையம் கடிதம் எழுதியுள்ளது. அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது பின்வருமாறு:- ஊரக உள்ளாட்சிகளின் தேர்தலுக்கு தேவையான அனைத்து வகையான வாக்குப்பதிவு பொருட்களையும் தயார்நிலையில் வைக்க வேண்டும். ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கு பயன்படுத்தப்படும் அனைத்து வகையான வாக்குப்பெட்டிகளின் தற்போதைய தரம் மற்றும் நிலையை, இருப்பு வைக்கப்பட்டுள்ள இடங்களுக்குச்சென்று ஆய்வு செய்து, வாக்குப்பதிவுக்கு பயன்படுத்தும் வகையில் அவற்றில் சிறிதளவு பழுதடைந்தவை, முழுமையாக பழுத்தடைந்தவற்றை தரம் பிரித்து வைக்க வேண்டும். சிறிய பழுதுகளை சரி செய்ய பெட்டி ஒன்றுக்கு ரூ.21 வழங்க பரிந்துரைக்கப்படுகிறது. அரசு வழங்கியுள்ள வழிகாட்டுதல்படி அவற்றை தயார் நிலையில் வைக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.