மிக்ஜாம் புயல் முன்னெச்சரிக்கை: மாநில அவசரகால செயல்பாட்டு மையத்தில் முதல்வர் ஆய்வு
சென்னை எழிலகத்தில் உள்ள மாநில அவசரகால செயல்பாட்டு மையத்தில், 'மிக்ஜாம்' புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முதல்வர் ஸ்டாலின் பார்வையிட்டு ஆய்வு செய்தார். வங்கக் கடலில் உருவாகியுள்ள மிக்ஜாம் புயல் காரணமாக, வட தமிழக மாவட்டங்களுக்கு இன்றும், நாளையும் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் புயல் கரையை கடக்கும் போது பலத்த காற்று வீசக்கூடும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இதனால், தமிழ்நாடு அரசு புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிர்படுத்தி உள்ளது. இதன் ஒரு பகுதியாக, முதல்வர் ஸ்டாலின் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பார்வையிட்டார். மேலும், தென் மண்டல வானிலை ஆய்வு மையத்தின் இயக்குனர் பாலச்சந்திரனுடன், எழிலகத்திலிருந்து காணொளி வாயிலாக புயல் குறித்து கேட்டறிந்தார்.
பொதுமக்கள் தேவை இல்லாமல் வெளியே வர வேண்டாம்- முதல்வர் வலியுறுத்தல்
புயல் தமிழகத்தை நெருங்கும் போது அதிக காற்று வீச கூடலாம் என்பதால், அசம்பாவிதங்களை தவிர்க்க பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என முதல்வர் வலியுறுத்தியுள்ளார். தேவைப்பட்டால் மாநகராட்சி மற்றும் மாவட்ட நிர்வாகிகளின் அறிவுரையின் பேரில், நிவாரண முகங்களில் தங்கும் படியும் மக்களை கேட்டுக் கொண்டுள்ளார். சென்னையில் புயல் முன்னெச்சரிக்கை பணிகளை அமைச்சர்கள் நேரு, சேகர்பாபு, கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு மற்றும் மா சுப்பிரமணியன் ஆகியோர் கவனித்து வருவதாகவும், திருவள்ளூர் மாவட்டத்தில் அமைச்சர் மூர்த்தி, ராணிப்பேட்டை மாவட்டத்திற்கு அமைச்சர் காந்தி, செங்கல்பட்டு மாவட்டத்தில் அன்பரசன் ஆகியோர் பணியாற்றி வருவதாக முதல்வர் தெரிவித்தார்.