"இங்கே அனைவரும் சமம்.. இது மக்களாட்சி!" சட்டமன்றத்தில் முதல்வர் விஜய்யின் முதல் உரை!
செய்தி முன்னோட்டம்
தமிழக அரசியலில் ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடங்கியுள்ள தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், இன்று சட்டமன்றத்தில் தனது முதல் உரையை நிகழ்த்தினார். "நல்லது ஏற்கப்பட்டு, அல்லவை நிராகரிக்கப்பட வேண்டும்" என்ற முழக்கத்தோடு அவர் ஆற்றிய உரை, அரசியல் வட்டாரத்தில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. தமிழக முதலமைச்சராகப் பதவியேற்ற பிறகு, முதன்முறையாகச் சட்டமன்றத்தில் உரையாற்றிய ஜோசப் விஜய், ஜனநாயகத்தின் மாண்பு மற்றும் சபாநாயகர் பதவியின் புனிதத்தன்மை குறித்து மிக ஆழமான கருத்துகளைப் பதிவு செய்தார். தவெக அரசு தனது பெரும்பான்மையை நிரூபிக்கத் தயாராகி வரும் வேளையில், முதல்வரின் இந்தப் பேச்சு ஒரு முதிர்ச்சியான அரசியல் நகர்வாகப் பார்க்கப்படுகிறது.
வரலாற்றுப் பின்னணி
சபாநாயகர் இருக்கையின் 'சீக்ரெட்'
சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகரை இருக்கையில் அமர வைத்த பிறகு, அந்தப் பதவியின் முக்கியத்துவம் குறித்து முதல்வர் விஜய் விளக்கிய விதம் அனைவரையும் ஈர்த்தது. சபாநாயகர் இருக்கை என்பது வெறும் அதிகாரத்தின் அடையாளம் அல்ல, அது நடுநிலைமையின் சின்னம் என்பதை அவர் தெளிவுபடுத்தினார். சபாநாயகரை ஏன் இரு தரப்புத் தலைவர்களும் கைபிடித்து அழைத்துச் சென்று அமர வைக்கிறார்கள் தெரியுமா? அவர் இனி ஆளுங்கட்சிக்கோ, எதிர்க்கட்சிக்கோ சொந்தமானவர் அல்ல; அவர் இந்தச் சபைக்கு மட்டுமே சொந்தமானவர். பாரபட்சமற்ற முறையில் அவர் சபையை வழிநடத்த வேண்டும் என்பதைக் குறிக்கவே இந்த மரபு பின்பற்றப்படுகிறது" என விஜய் விளக்கமளித்தார்.
சம உரிமை
ஓர் உறுப்பினர் என்றாலும் சமமே!
மக்களாட்சியின் அடிப்படைத் தத்துவங்களைச் சுட்டிக்காட்டி விஜய் பேசியதாவது மக்களே மக்களுக்காக மக்களால் நடத்தும் ஆட்சிதான் மக்களாட்சி. இந்தச் சட்டமன்றத்தில் உறுப்பினர்களின் எண்ணிக்கை முக்கியமல்ல; அவர்களின் கருத்துகளே முக்கியம். ஒரு உறுப்பினரைக் கொண்ட கட்சியாக இருந்தாலும் சரி, அதிக உறுப்பினர்களைக் கொண்ட கட்சியாக இருந்தாலும் சரி, அவர்கள் முன்வைக்கும் கருத்துகளுக்குச் சமமான மதிப்பளிக்கப்படும். இங்கே அனைவரும் சமம் என முதல்வர் விஜய் உறுதிபடத் தெரிவித்தார்.
ஜனநாயகத்தின் மூளை
எல்லோருக்கும் எல்லாம்
சட்டமன்றத்தின் செயல்பாடு குறித்துப் பேசிய அவர், இந்தச் சட்டமன்றம் வெறும் விவாத மேடை மட்டுமல்ல, இது ஜனநாயகத்தின் மூளையாகச் செயல்பட வேண்டும். இங்கே நல்லது எதுவாக இருந்தாலும் ஏற்கப்படும், அல்லவை (தீயவை) எதுவாக இருந்தாலும் நிராகரிக்கப்படும் என்றார். அரசியலுக்கு அப்பாற்பட்டுப் பண்புகள் நிலைநாட்டப்பட வேண்டும் என்றும், பேரவையின் மாண்பைச் சபாநாயகர் காக்க வேண்டும் என்றும் அவர் தனது உரையில் கேட்டுக்கொண்டார். "எல்லோருக்கும் எல்லாம்" என்ற நோக்கில், சிறிய கட்சிகளுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்படும் என்ற விஜய்யின் இந்த அறிவிப்பு, தமிழக அரசியலில் ஒரு ஆரோக்கியமான மாற்றத்திற்கு வித்திட்டுள்ளது.