முதல்வர் திறனாய்வு தேர்வு முடிவுகள் டிசம்பர் 1ம் தேதி வெளியாகும் என்று அறிவிப்பு
தமிழ்நாடு மாநிலத்தில் அரசு ஒப்புதல் பெற்று இயங்கும் சிபிஎஸ்இ, ஐசிஎஸ்இ, உள்ளிட்ட அனைத்து வித பள்ளிகளிலும் படிக்கும் 11ம் வகுப்பு மாணவர்களுக்கு கடந்தாண்டு முதல் தமிழ் மொழி இலக்கிய திறனாய்வு தேர்வு நடத்தப்படுகிறது. தமிழக அரசு நடத்தும் இந்த தேர்வில் நல்ல மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சியடையும் மாணவர்களுள் 1,500 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு 2 ஆண்டுகாலம் மாதம் ரூ.1,500 ஊக்கத்தொகையாக வழங்கப்படும் என்று கூறப்படுகிறது. அதன்படி இந்தாண்டிற்கான இந்த தமிழ் மொழி இலக்கிய திறனாய்வு தேர்வு கடந்த அக்.,15ம் தேதி நடைபெற்ற நிலையில், 2 லட்சத்து 20 ஆயிரத்து 880 மாணவர்கள் இந்த தேர்வினை எழுதியுள்ளனர்.
முதல்வர் திறனாய்வு தேர்வு கடந்த அக்டோபர்.7ம்.,தேதி மாநிலம் முழுவதும் நடத்தப்பட்டது
இதனிடையே, இந்தாண்டு அரசு பள்ளி மாணவர்கள் உயர்கல்வி படிப்பதனை ஊக்குவிக்கும் விதமான முதலமைச்சர் திறனாய்வு தேர்வு தமிழக அரசால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இத்தேர்வு பிளஸ்-1 படிக்கும் மாணவர்களுக்கு நடத்தப்பட்டு அதில் தேர்ச்சி பெறுவோரில் 1,000-பேர் தேர்வு செய்யப்படுவார்கள் என்று கூறப்படுகிறது. அவ்வாறு தேர்வு செய்யப்படும் மாணவர்களுக்கு மாதந்தோறும் ரூ.1,000, அவர்கள் தங்கள் இளநிலை பட்டப்படிப்பினை முடிக்கும் வரையில் வழங்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. அந்த வகையில் மாணவர்களின் திறனை கண்டறியும் நோக்கில் நடத்தப்படும் முதல்வர் திறனாய்வு தேர்வு கடந்த அக்டோபர்.7ம்.,தேதி மாநிலம் முழுவதும் நடைபெற்றது. இந்நிலையில் இத்தேர்வின் முடிவுகள் வரும் டிசம்பர் 1ம்.,தேதி வெளியிடப்படவுள்ளது. www.dge.tn.gov.in என்னும் இணையத்தளத்தில் மாணவர்கள் தங்களது பதிவுஎண் மற்றும் பிறந்ததேதியினை உள்ளிட்டு தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.