Loading...
தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்: உசிலம்பட்டியிலிருந்து மதுரை அரசு மருத்துவமனைக்கு நிகழ்ச்சி மாற்றம்
'தாய்மாமன் தங்க மோதிரம் வழங்கும் திட்டம்' தற்போது மதுரை அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளது

தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்: உசிலம்பட்டியிலிருந்து மதுரை அரசு மருத்துவமனைக்கு நிகழ்ச்சி மாற்றம்

எழுதியவர் Venkatalakshmi V
Sep 22, 2026
08:59 am

செய்தி முன்னோட்டம்

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அரசு மருத்துவமனையில் வரும் செப்டம்பர் 28-ஆம் தேதி முதலமைச்சர் விஜய் தொடங்கி வைக்கவிருந்த 'தாய்மாமன் தங்க மோதிரம் வழங்கும் திட்டம்' தற்போது மதுரை அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளது. மதுரையில் இத்திட்டத்தைத் தொடங்கி வைப்பதற்காக அதிகாரிகள் குழுவினர் முன்னதாக உசிலம்பட்டி அரசு மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்டு, அங்கு 1,106 ஒரு கிராம அளவிலான தங்க மோதிரங்களை ஒப்படைத்தனர். எனினும், பாதுகாப்பு மற்றும் அடிப்படை வசதிகளை கருத்தில் கொண்டு தற்போது இந்தத் தொடக்க விழா நிகழ்ச்சி மதுரை அரசு மருத்துவமனை வளாகத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.

விவரங்கள்

சிறப்பு ஏ.டி.எம் கார்டு வடிவத்தில் தங்க மோதிரம்

இத்திட்டத்தின் கீழ் வழங்கப்படும் 1 கிராம தங்க மோதிரமானது சிறப்பு ATM கார்டு வடிவ அட்டையில் முதலமைச்சர் விஜய்யின் உருவப்படம் பொறிக்கப்பட்டு, அதன் நடுவே பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.

மதுரை அரசு மருத்துவமனையில் மட்டும் முதற்கட்டமாக 4,150 தங்க மோதிரங்கள் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

செப்டம்பர் 28 அன்று நடைபெறும் விழாவில், செப்டம்பர் 27 மற்றும் அதற்கு முன் பிறந்த 50 குழந்தைகளுக்கு முதலமைச்சர் நேரடியாகத் தங்க மோதிரங்களை வழங்கவுள்ளார்.

தொடர்ந்து மகப்பேறு வார்டில் உள்ள 20 தாயார்களுக்கு நேரடியாகச் சென்று மோதிரங்களை வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

மையங்கள்

மதுரை மாவட்டத்தில் செயல்படும் மையங்கள்

மதுரை மாவட்டத்தில், மதுரை அரசு மருத்துவமனை, உசிலம்பட்டி அரசு மருத்துவமனை, மேலூர் அரசு மருத்துவமனை, திருமங்கலம் அரசு மருத்துவமனை மையங்களில் பாதுகாப்பான பெட்டக வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

இதன்கீழ் வரும் ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் துணை மையங்களில் 2026 ஜூன் 22 முதல் பிறந்த குழந்தைகளுக்குத் தொடர்ந்து தங்க மோதிரங்கள் வழங்கப்படும்.

நிகழ்ச்சிக்கான உள்கட்டமைப்பு மற்றும் பாதுகாப்பு வசதிகளை மாவட்ட ஆட்சியர் நிஷாந்த் கிருஷ்ணா, மாநகராட்சி ஆணையர் கௌரவ்குமார் மற்றும் மருத்துவமனை டீன் அருள் சுந்தரேஷ்குமார் ஆகியோர் நேரில் ஆய்வு செய்தனர்.

இன்று சென்னையிலிருந்து வரும் உயர்மட்ட அதிகாரிகள் குழு இடத்தை பார்வையிட்ட பின் இறுதி அட்டவணை உறுதி செய்யப்படும்.

ADVERTISEMENT