கதுவா தாக்குதலுக்கு முன், துப்பாக்கி முனையில் உள்ளூர் மக்களை உணவு சமைக்க மிரட்டிய பயங்கரவாதிகள்
இரு தினங்களுக்கு முன்னர் ஜம்மு காஷ்மீரின் கதுவாவில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த ராணுவ கான்வாய் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதில், 5 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு முன்னர், பயங்கரவாதிகள், உள்ளூர் மக்களை துப்பாக்கி முனையில் உணவு சமைக்கும்படி மிரட்டியதாக செய்தி வெளியாகியுள்ளது. அதுமட்டுமின்றி, தாக்குதலின் போது தீவிரவாதிகள் பாடி கேமராக்களை அணிந்திருந்ததாகவும் கூறப்படுகிறது. தாக்குதல் நடத்தியதும், பயங்கரவாதிகள் ராணுவ வீரர்களின் ஆயுதங்களைப் பறிக்க முயற்சித்ததாகவும், படுகாயம் அடைந்திருந்தாலும் வீரர்கள் மிகுந்த தைரியத்துடனும், துணிச்சலுடனும் எதிர்த்து போராடி அவர்களின் திட்டத்தை முறியடித்தனர் என்று வட்டாரங்கள் தெரிவித்தன. ஜம்மு பகுதியில் ஒரு மாதத்திற்குள் நடந்த ஐந்தாவது தீவிரவாத தாக்குதல் இதுவாகும்.
தக்க பதிலடி தரப்படும் என மத்திய அரசு சூளுரை
இந்த தாக்குதலுக்கு தொடர்பு இருப்பதாக 20க்கும் மேற்பட்ட சந்தேக நபர்கள் காவல்துறையினரால் விசாரணைக்காக தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். முன்னதாக, கதுவா தாக்குதலை பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்தியதாக ஆதாரங்கள் தெரிவித்தன. அவர்கள் அதிநவீன ஆயுதங்களைப் பயன்படுத்தியதாகவும், உள்ளூர் ஆதரவாளர்களின் உதவியுடன் அப்பகுதியில் உளவு பார்த்தது தெரிய வந்துள்ளது. பயங்கரவாதிகள், வெளிநாட்டு M4 கார்பைன் துப்பாக்கிகள் உள்ளிட்ட மேம்பட்ட ஆயுதங்களையும், மற்ற வெடிமருந்துகளையும் பயன்படுத்தியதாக ஆதாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த தாக்குதலுக்கு வலுவான பதிலடியாக, ராணுவ வீரர்களின் தியாகம் "பழி வாங்காமல் வீணடிக்கப்படாது" என்று பாதுகாப்பு அமைச்சகம் கூறியது.