
தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு ஆகஸ்ட் 25-இல் மதுரையில் நடைபெறும்
செய்தி முன்னோட்டம்
தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) இரண்டாவது மாநில மாநாடு வருகிற ஆகஸ்ட் 25ஆம் தேதி திங்கட்கிழமை அன்று மதுரையில் நடைபெற உள்ளது என்று கட்சித் தலைவர் விஜய் அறிவித்துள்ளார். இந்த தகவலை அவர் தனது எக்ஸ் (முன்னர் ட்விட்டர்) பக்கத்தில் பகிர்ந்துள்ளார். "வாகை சூடும் வரலாறு திரும்பட்டும். வெற்றி நிச்சயம்," என்று அவர் பதிவிட்டுள்ளார். தவெக சார்பில் இதற்கு முந்தைய முதல் மாநில மாநாடு 2024 அக்டோபர் 27ஆம் தேதி, விழுப்புரம் - விக்கிரவாண்டி அருகே வி. சாலையில் நடைபெற்றது. அந்த மாநாட்டில் விஜய் தமிழக அரசியல் சூழ்நிலையைப்பற்றி விரிவாக பேசியதுடன், திராவிடமும் தமிழ் தேசியமும் தான் கழகத்தின் இரண்டு கண்கள் எனவும், பிளவுபாடு மற்றும் ஊழலே நம் எதிரிகள் எனவும் கூறியிருந்தார்.
மாநாடு
2026 தேர்தலை முன்னிட்டு நடைபெறவுள்ள மாநாடு
இந்த முறை மாநாடு நடைபெறவுள்ள மதுரை, தமிழ்நாட்டின் அரசியல் வரலாற்றில் முக்கியப் பங்கை வகிக்கிறது. எம்ஜிஆர் தொடங்கி பல தலைவர்கள் மதுரையிலிருந்து அரசியல் எழுச்சியடைந்துள்ளனர். எனவே, இந்த மாநாடு, விஜய்க்கு முக்கியமான அரசியல் திருப்பமாய் அமையும் என அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன. மேலும், 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான அரசியல் சூடு அதிகரித்து வரும் நிலையில், இந்த மாநாடு தேர்தலுக்கு முன்னோடியான முக்கிய நிகழ்வாக இருக்கும் என அரசியல் நிபுணர்கள் மதிப்பீடு செய்கிறார்கள். அண்மையில் சென்னை பனையூரில் நடைபெற்ற தவெக முதலாவது பொதுக்குழு கூட்டத்தில், விஜய் கூட்டணிகள் குறித்து தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்தியிருந்தார். அந்த நிலைப்பாடு மதுரை மாநாட்டில் மேலும் தெளிவாக உருப்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.