தீபாவளி பண்டிகைக்கு பட்டாசுகள் வெடிப்பதில் 19 கட்டுப்பாடுகள் - சென்னை மாநகர காவல்துறை
தீபாவளி பண்டிகை என்றாலே நம் அனைவரது நினைவிற்கும் வருவது பட்டாசுகள் தான். இந்நிலையில் மக்கள் இந்த தீபாவளி பண்டிகையை பாதுகாப்புடன் பட்டாசுகளை வெடித்து கொண்டாடும் வகையில் சில விதிமுறைகள் மற்றும் 19 கட்டுப்பாடுகளை விதித்து சென்னை காவல்துறை ஆணையர் சந்தீப்ராய் ரத்தோர் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதன்படி, உச்சநீதிமன்றம் உத்தரவுப்படி, சுற்றுசூழலுக்கு தீங்கு விளைவிக்காத பசுமை பட்டாசுகள் மட்டுமே விற்கவேண்டும், வெடிக்கவும் வேண்டும். பட்டாசுகளை வெடிக்க நிர்ணயிக்கப்பட்டுள்ள காலை 6 மணிமுதல் 7 மணிவரை மற்றும் இரவு 7 முதல் 8 மணிவரை என குறிப்பிட்ட அந்த 2 மணிநேரம் மட்டுமே வெடிக்க வேண்டும்.
தடை செய்யப்பட்ட சீன பட்டாசுகள் வெடிக்கவோ, விற்பனைக்கோ தடை
சுற்றுசூழல் பாதுகாப்பு விதியான 89ன் படி, 4 மீட்டருக்கு அப்பால் 125 டெசிபலுக்கு மேல் ஒலி எழுப்பக்கூடிய பட்டாசுகளை தயாரிக்கவோ, விற்கவோ கூடாது, அதேபோல் தடை செய்யப்பட்ட சீன பட்டாசுகளை வெடிக்கவோ, விற்கவோ கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. பட்டாசுகள் எளிதில் தீப்பற்ற கூடிய பெட்ரோல் நிலையங்கள் அருகிலோ, 2,3 அல்லது 4 சக்கர வாகனங்கள் அருகிலோ பட்டாசுகள் வெடிக்கப்பட கூடாது. அருகில் உள்ளோர் உயிருக்கு ஆபத்து நேரும் வகையிலோ, தீ காயங்கள் ஏற்படுத்தும் வகையிலோ பட்டாசுகளை கொளுத்தி தூக்கி எறிந்து விளையாடுவது கூடாது என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பெரியவர்கள் பாதுகாப்பு இல்லாமல் குழந்தைகள் பட்டாசுகள் வெடிக்க அனுமதிக்க கூடாது
பொதுமக்கள் நடமாடும் இடங்களில் கவனக்குறைவாக பட்டாசுகளை கையாளக்கூடாது. தகர டப்பாக்களை போட்டு பாட்டாசுகள் வெடிப்பதன் மூலம், அந்த டப்பாக்கள் தூக்கி எறியப்படும். அதனால் விபத்துகள் ஏற்படும் என்பதால் இதுபோன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது. ராக்கெட் வெடிகளை குடிசை மற்றும் மாடி கட்டிடங்கள் இருக்கும் இடத்தில் வெடிக்க கூடாது. பட்டாசுகள் ஈரமாக இருக்கும்பட்சத்தில் அதனை சமையலறையில் வைத்து உலர்த்த கூடாது. பெரியவர்கள் அருகாமையில் இல்லாமல் குழந்தைகள் பட்டாசு வெடிக்க அனுமதிக்க கூடாது. பட்டாசு கடைகள் அருகில் நின்று புகைபிடிப்பது, புகைபிடித்த சிகரெட் துண்டுகளை எறிவது போன்றவைகளை செய்யக்கூடாது.
பட்டாசுகள் பக்கத்தில் எரியும் விளக்குகள் வைக்க கூடாது
எக்காரணம் கொண்டும் கூரை வீடுகள் மற்றும் குடிசை பகுதிகளில் வான வேடிக்கை போன்ற பட்டாசுகள் வெடிக்க கூடாது. எரியும் விளக்குகள் பக்கத்தில் பட்டாசுகளை வைக்க கூடாது. பட்டாசு விற்பனை செய்யப்படும் கடைகளில் மெழுகுவர்த்தி, சிம்லி விளக்குகள், பெட்ரோமாக்ஸ் லைட் போன்றவைகள் பயன்படுத்தல் கட்டாயம் கூடாது. பட்டாசுகள் வைக்கப்பட்டுள்ள வீடுகள் அல்லது கடைகளில் ஊதுபத்தி, மெழுகுவர்த்தி போன்றவை வைக்க கூடாது. விளம்பரம் செய்யும் பொருட்டோ, ஒருவருக்கு ஒருவர் போட்டி போட்டுக்கொண்டோ பட்டாசு கடைகள் முன் நின்று பட்டாசுகள் வெடிக்க கூடாது. கால்நடைகள் அருகில் வைத்து பட்டாசுகள் வெடிக்கும் பட்சத்தில், அவைகள் மிரண்டு ஓடி சாலையில் வரும் வாகனங்கள் அல்லது பாதசாரிகள் மேல் முட்டி விபத்துகள் ஏற்பட வாய்ப்புள்ளதால் அதனை தவிர்த்து கொள்ள வேண்டும்.
தீ விபத்து ஏற்பட்டால் அவசர எண்களுக்கு தகவல் அளிக்க அறிவுறுத்தல்
மேலும் வெடிகளை வெடிக்க தீக்குச்சி அல்லது தீயை பயன்படுத்துவதை விட நீளமான ஊதுபத்தியினை பயன்படுத்துவதே உகந்தது. மேலும் பாதுகாப்பில்லாமல் பட்டாசுகள் வெடித்தால் ஏற்படும் தீ விபத்துகள் மற்றும் அதன் அபாயம் குறித்து குழந்தைகளுக்கு பள்ளி ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் அறிவுறுத்த வேண்டும் என்றும் சென்னை காவல்துறை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. தொடர்ந்து, பட்டாசு அல்லது தீ விபத்துகள் ஏற்பட்டால் உடனே தேசிய உதவி எண் 112, காவல்துறை அவசர எண் 100, தீயணைப்பு துறை உதவி எண் 101, ஆம்புலன்ஸ் உதவி எண் 108 உள்ளிட்டவைகளுக்கு தகவல் அளித்து மனித உயிர்களை காப்பாற்றுமாறும் சென்னை காவல்துறை தரப்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.