தமிழக வானிலை அப்டேட்: இன்று 6 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை
செய்தி முன்னோட்டம்
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து வந்த நிலையில், இன்று ஈரோடு, திண்டுக்கல் உள்ளிட்ட 6 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் இன்று முதல் அக்டோபர் 1-ஆம் தேதி வரை பல்வேறு இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. இன்றைய தினம் ஈரோடு, திண்டுக்கல், கள்ளக்குறிச்சி, மதுரை, நாமக்கல் மற்றும் திருவண்ணாமலை ஆகிய 6 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும். மேலும், மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதி மாவட்டங்கள், வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, கரூர், திருச்சி, விழுப்புரம், கடலூர் மற்றும் புதுச்சேரியில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.
கனமழை
நாளை 11 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை
நாளை (செப்டம்பர் 30) நீலகிரி, ஈரோடு, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, மயிலாடுதுறை, திருவாரூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை மற்றும் திருச்சி ஆகிய 11 மாவட்டங்களில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
அக்டோபர் 1-ஆம் தேதி கோவை, நீலகிரி மற்றும் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கனமழை தொடரக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையை பொறுத்தவரை, இன்றும் நாளையும் இரவு நேரங்களில் நகரின் சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
கடந்த சில நாட்களாக நிலவி வந்த கடுமையான வெப்பத்திலிருந்து இந்த மழைப்பொழிவு மக்களுக்குச் சற்று ஆறுதலைத் தரும் என எதிர்பார்க்கப்படுகிறது.