தமிழகத்தில் இன்று முதல் கனமழை வெளுத்து வாங்கும்: வானிலை ஆய்வு மையம்
செய்தி முன்னோட்டம்
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வரும் சூழலில், வங்கக்கடலில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் காற்றழுத்த தாழ்வுப் பாதை காரணமாக மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் அடுத்த சில நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இன்று, அக்டோபர் 20 புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் சில இடங்களில் இடி மின்னல் மற்றும் மணிக்கு 40 முதல் 50 கி.மீ வேகத்தில் வீசும் பலத்த காற்றுடன் கூடிய கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என்பதால் இங்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வானிலை எச்சரிக்கை
கனமழை எச்சரிக்கப்பட்ட பிற மாவட்டங்கள்
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருச்சி, அரியலூர், பெரம்பலூர், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர் மற்றும் ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
அக்டோபர் 21 அன்று தேனி, தென்காசி, விருதுநகர், திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் கன முதல் மிக கனமழையும், டெல்டா மற்றும் தென் மாவட்டங்களில் சில இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும்.
அக்டோபர் 22 - 25 அன்று தென்தமிழக மற்றும் டெல்டா மாவட்டங்களைத் தொடர்ந்து, மேற்குத் தமிழகம் மற்றும் உள் மாவட்டங்களிலும் கனமழை நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.