சென்னைக்கு வெளியே மாபெரும் நிர்வாக நகரம்? பட்டினப்பாக்கம் சர்ச்சையால் திருவிடந்தை இடத்தை தேர்வு செய்யுமா அரசு?
செய்தி முன்னோட்டம்
சென்னை மெரினா கடற்கரையை அடுத்துள்ள பட்டினப்பாக்கத்தில் ₹1,200 கோடி செலவில் புதிய தலைமைச் செயலகம் மற்றும் சட்டமன்ற வளாகம் அமைக்கப்படும் என்று அரசு அறிவித்திருந்த நிலையில், அதற்கு எழுந்துள்ள பலத்த எதிர்ப்புகளால் மாற்று இடங்களை அரசு பரிசீலிக்கலாமா என்பது குறித்து விவாதங்கள் எழுந்துள்ளன. பட்டினப்பாக்கம் ஃபோர்ஷேர் எஸ்டேட் பகுதியில் சுமார் 20 ஏக்கர் நிலப்பரப்பில் புதிய தலைமை செயலகப் பூர்வாங்க பணிகளுக்கான அரசாணை வெளியிடப்பட்டதில் இருந்தே மீனவர் அமைப்புகளும் பல்வேறு அரசியல் கட்சிகளும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றன. ஏற்கனவே கடுமையான போக்குவரத்து நெரிசல் நிலவும் பட்டினப்பாக்கத்தில் புதிய செயலகம் அமைந்தால், அப்பகுதியின் கடல்சார் இயற்கை சூழல் மற்றும் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதோடு, போக்குவரத்து நெரிசலும் பலமடங்கு அதிகரிக்கும் என அவர்கள் எச்சரிக்கின்றனர்.
மாற்றுத் திட்டம்
ஜெயலலிதாவின் 'திருவிடந்தை' மாற்றுத் திட்டம்
பட்டினப்பாக்கத்திற்கு எழுந்துள்ள எதிர்ப்பைத் தொடர்ந்து, ECR-ல் உள்ள திருவிடந்தை -தையூர் பகுதியை மாற்று இடமாக பயன்படுத்தலாம் என வல்லுநர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
கடந்த 2000-களில் அன்றைய முதலமைச்சர் ஜெயலலிதா, சென்னைக்கு வெளியே சுமார் 2,000 ஏக்கர் பரப்பளவில் புதிய நிர்வாக நகரத்தை அமைக்க மாமல்லபுரம் மற்றும் திருவிடந்தை பகுதிகளை பரிசீலித்தார்.
தற்போது அப்பகுதியில் கணிசமான அளவு அரசு நிலங்கள் இருப்பதால், ஒருங்கிணைந்த நிர்வாக மையத்திற்கு அது பொருத்தமானதாக இருக்கும் எனப் பேசப்படுகிறது.
இருப்பினும், திருவிடந்தைக்குத் தலைமைச் செயலகத்தை மாற்றுவது குறித்து அரசு தரப்பில் அதிகாரப்பூர்வமாக எந்தத் திட்டமும் தற்போது பரிசீலனையில் இல்லை என்று மூத்த அதிகாரிகள் மறுத்துள்ளனர்.
உட்கட்டமைப்பு
அடுத்த 100 ஆண்டுகளுக்கான உட்கட்டமைப்பு தேவைகள்
அடுத்த 100 ஆண்டுகளுக்கான மாநிலத்தின் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில், தனி வளாகமாக இல்லாமல் 500 முதல் 1,000 ஏக்கர் பரப்பளவில் ஒருங்கிணைந்த நிர்வாக நகரத்தை நிறுவ வேண்டும் எனப் பல்வேறு அமைப்புகள் வலியுறுத்துகின்றன.
நிலம் கிடைப்பது மட்டுமின்றி, தடையற்ற போக்குவரத்து இணைப்பு, எதிர்கால விரிவாக்கத்திற்கான வாய்ப்பு மற்றும் இயற்கை பேரிடர்களைs தாங்கும் திறன் ஆகிய காரணிகளைக் கருத்தில் கொண்டே முதலமைச்சர் தலைமையிலான அரசு இறுதி முடிவை எடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.