Loading...
முதல்வர் விஜய் தலைமையில் நவம்பர் 30ல் அமைச்சர் முகமது பர்வேஸ் திருமணம்: இணையத்தில் வைரலாகும் திருமண அழைப்பிதழ்
அமைச்சர் முகமது பர்வேஸின் எளிமையான திருமண அழைப்பிதழ் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

முதல்வர் விஜய் தலைமையில் நவம்பர் 30ல் அமைச்சர் முகமது பர்வேஸ் திருமணம்: இணையத்தில் வைரலாகும் திருமண அழைப்பிதழ்

எழுதியவர் Vasuki
Nov 21, 2026
05:44 pm

செய்தி முன்னோட்டம்

தமிழக தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சராகப் பதவி வகித்து வரும் J. முகமது பர்வேஸுக்கு, வரும் நவம்பர் 30-ஆம் தேதி சென்னையில் திருமணம் நடைபெறவுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி தொகுதியில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் போட்டியிட்டுத் தனது முதல் தேர்தலிலேயே வெற்றி பெற்று அமைச்சரான முகமது பர்வேஸ், அறந்தாங்கியைச் சேர்ந்த N. ரேஷ்மா என்பவரைக் கரம்பிடிக்கவுள்ளார். சென்னை எம்.ஆர்.சி. நகரில் உள்ள நட்சத்திர விடுதியில் முதலமைச்சர் விஜய் தலைமையில் நடைபெறவுள்ள இந்தத் திருமண விழாவில், அமைச்சர்கள், ஐஏஎஸ் அதிகாரிகள், கழக நிர்வாகிகள் மற்றும் நெருங்கிய உறவினர்கள் எனச் சுமார் 200 பேர் மட்டுமே பங்கேற்கும் வகையில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

வைரலாகும் அழைப்பிதழ்

தவெக கொடி மற்றும் முதல்வர் விஜய் புகைப்படத்துடன் வைரலாகும் அழைப்பிதழ்

தமிழக வெற்றிக் கழகம் ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு, அமைச்சராகப் பதவி வகிக்கும் ஒருவருக்கு நடைபெறும் முதல் திருமணம் இது என்பதால் அரசியல் வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இந்த நிலையில், அமைச்சர் முகமது பர்வேஸின் திருமண அழைப்பிதழ் சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி கவனம் ஈர்த்துள்ளது.

வழக்கமான ஆடம்பர அழைப்பிதழ்களைப் போல் இல்லாமல், இதன் முதல் பக்கத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியும், அதற்குக் கீழே முதலமைச்சர் விஜய்யின் புகைப்படமும் இடம்பெற்றுள்ளன.

மறுபுறம் மணமகன் J. முகமது பர்வேஸ் (B.A., LL.B) மற்றும் மணமகள் N. ரேஷ்மா (MBA) ஆகியோரின் பெயர்களும், விழா விவரங்களும் அச்சிடப்பட்டுள்ளன.

அழைப்பிதழின் விலை

ஆடம்பரத்தை தவிர்த்து எளிமையாக வடிவமைக்கப்பட்ட அழைப்பிதழின் விலை

சமீபத்தில் தமிழகத்தில் நடைபெற்ற அரசியல் மற்றும் திரையுலகப் பிரபலங்களின் திருமணங்கள் பல கோடி ரூபாய் செலவில் பிரம்மாண்டமாக நடத்தப்பட்டுப் பேசுபொருளான நிலையில், ரூ.9.6 கோடி சொத்து மதிப்பு கொண்ட அமைச்சர் முகமது பர்வேஸின் திருமணம் எவ்வாறு அமையும் என்ற விவாதம் எழுந்துள்ளது.

ஆனால், பெரும் பொருட் செலவைத் தவிர்த்து மிகவும் எளிமையான முறையில் இந்தத் திருமண அழைப்பிதழ் வடிவமைக்கப்பட்டுள்ளது.

வண்ணப் புகைப்படத்துடன் கூடிய இந்த ஒரு அழைப்பிதழ் அச்சிட சுமார் ரூ.150 முதல் ரூ.250 வரை மட்டுமே செலவாகியிருக்கும் எனக் கூறப்படுவது இணையவாசிகளிடையே பாராட்டைப் பெற்று வருகிறது.

ADVERTISEMENT