3 நாள் பயணமாக டெல்லிக்கு சென்ற முதல்வர் விஜய்: என்ன அஜெண்டா?
செய்தி முன்னோட்டம்
தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய், மூன்று நாள் அரசுமுறைப் பயணமாக இன்று காலை டெல்லி புறப்பட்டுச் சென்றார். டெல்லியில் நடைபெறவுள்ள நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்பதுடன், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உள்ளிட்ட முக்கியத் தலைவர்களை அவர் நேரில் சந்தித்துப் பேசவுள்ளார். முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு அவர் டெல்லிக்கு மேற்கொள்ளும் இரண்டாவது பயணம் இதுவாகும். முன்னதாக, கடந்த மே 27 அன்று டெல்லி சென்றிருந்த அவர், பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோரை மட்டும் சந்தித்துவிட்டு அடுத்த நாளே சென்னை திரும்பியிருந்தார். ஆனால், இந்த முறை பல்வேறு கூடுதல் முக்கியச் சந்திப்புகள் உள்ளதால் அவரது பயணம் 3 நாட்களாக நீட்டிக்கப்பட்டுள்ளது.
நிகழ்ச்சி
நிதி ஆயோக் ஆளுமன்றக் குழுக் கூட்டம்
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் ஜூன் 11 அன்று நடைபெறும் நிதி ஆயோக் ஆளுமன்றக் குழுக் கூட்டத்தில் முதல்வர் விஜய் பங்கேற்கிறார். அனைத்து மாநில முதலமைச்சர்களும் கலந்துகொள்ளும் இக்கூட்டத்தில், கூட்டாட்சித் தத்துவம் மற்றும் மாநிலங்களின் வளர்ச்சித் திட்ட முன்னுரிமைகள் குறித்து விவாதிக்கப்பட உள்ளது. தமிழ்நாடு சார்பாக நிலுவையில் உள்ள திட்டங்களுக்கான நிதி மற்றும் ஒப்புதல்களை முதல்வர் இங்கு வலியுறுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
முக்கிய தலைவர்கள் சந்திப்பு
குடியரசுத் தலைவர், உள்துறை அமைச்சர் சந்திப்பு
தனது முந்தைய டெல்லி பயணத்தின் போது சந்திக்கத் தவறிய முக்கியத் தலைவர்களை இந்த முறை முதல்வர் விஜய் நேரில் சந்திக்கவுள்ளார். குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அவர்களைச் சந்தித்து மரியாதை நிமித்தமாகப் பேசுகிறார். மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா சந்தித்து மாநில சட்டம் ஒழுங்கு மற்றும் எல்லைப் பாதுகாப்புச் சார்ந்த விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடத்த வாய்ப்புள்ளது. சி.பி. ராதாகிருஷ்ணன் மற்றும் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களையும் அவர் இந்த 3 நாள் பயணத்தில் சந்திக்கத் திட்டமிட்டுள்ளார்.
சந்திரபாபு நாயுடு
சந்திரபாபு நாயுடுவும் டெல்லி வருகை
ஆந்திரப் பிரதேச முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவும் இரண்டு நாள் பயணமாக இன்று டெல்லி வருகிறார். அவர் அங்கு நடைபெறும் தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA) தலைவர்களின் முக்கிய ஆலோசனைக் கூட்டம் மற்றும் நிட்டி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்க உள்ளதாக ஆந்திர முதலமைச்சர் அலுவலகம் தெரிவித்துள்ளது.