Loading...
40% சுங்கக் கட்டணம் குறைகிறது: புதிய சுங்கக் கட்டணக் கணக்கீட்டு முறையை அறிமுகம் செய்தது NHAI
புதிய சுங்கக் கட்டணக் கணக்கீட்டு முறையை அறிமுகம் செய்தது NHAI

40% சுங்கக் கட்டணம் குறைகிறது: புதிய சுங்கக் கட்டணக் கணக்கீட்டு முறையை அறிமுகம் செய்தது NHAI

எழுதியவர் Venkatalakshmi V
Jul 27, 2026
11:05 am

செய்தி முன்னோட்டம்

இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI) மேம்பாலங்கள், சுரங்கப் பாதைகள் மற்றும் உயர்த்தப்பட்டப் பாதைகள் நிறைந்த நெடுஞ்சாலைகளுக்கான சுங்கக் கட்டணத்தை கணக்கிடும் முறையில் புதிய திருத்தத்தை கொண்டுவந்துள்ளது. இந்த புதிய கணக்கீட்டு முறையின் மூலம் பல முக்கிய நெடுஞ்சாலைகளில் வாகன ஓட்டிகள் செலுத்தும் சுங்கக் கட்டணம் 40% வரை குறைய வாய்ப்புள்ளது. இதுவரை நடைமுறையில் இருந்த விதிகளின்படி, பாலம் அல்லது சுரங்கப் பாதை போன்ற விலையுயர்ந்த கட்டுமானங்களின் 1 கிலோமீட்டர் தொலைவு, சுங்கக் கட்டணக் கணக்கீட்டிற்காக 10 கிலோமீட்டர் சாதாரணச் சாலைக்குச் சமமாகக் கருதப்பட்டது. உதாரணத்திற்கு, 10 கி.மீ நீளமுள்ள மேம்பாலப் பாதைக்கு 100 கி.மீ தூரத்திற்கான சுங்கக் கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்தது. இதனால் வாகன ஓட்டிகள் பெரும் நிதியிழப்பைச் சந்தித்து வந்தனர்.

கணக்கீட்டு முறை

புதிய திருத்தப்பட்ட கணக்கீட்டு முறை

தேசிய நெடுஞ்சாலைகள் கட்டண விதிகளில் கொண்டுவரப்பட்டுள்ள புதிய திருத்தத்தின்படி, இனிவரும் காலங்களில் கீழ்வரும் இரண்டு மதிப்பீடுகளில் எது குறைவானதோ அதனடிப்படையில் சுங்கக் கட்டணத் தொலைவு கணக்கிடப்படும்.

சிறப்புப் பாதைகளின் நீளத்தைப் போல் 10 மடங்கு மதிப்பு.

சாதாரணச் சாலை மற்றும் சிறப்புப் பாதைகள் அடங்கிய ஒட்டுமொத்த நெடுஞ்சாலை நீளத்தைப் போல் 5 மடங்கு மதிப்பு.

அதிகாரிகள் இதில் குறைந்த மதிப்புடைய தொகையையே சுங்கக் கட்டணத்திற்குக் கணக்கில் எடுத்துக்கொள்வார்கள்.

மேலும், 60 மீட்டருக்குக் குறைவான நீளம் கொண்ட சிறிய பாலங்கள் இனி தனியாகக் கணக்கிடப்பட மாட்டாது.

நன்மைகள்

புதிய விதியால் விளையும் நன்மைகள்

உதாரணமாக, 30 கி.மீ சாதாரணச் சாலையும் 10 கி.மீ மேம்பாலமும் கொண்ட 40 கி.மீ நெடுஞ்சாலையில், பழைய விதியின்படி 130 கி.மீ-க்கான கட்டணம் வசூலிக்கப்பட்டது.

ஆனால், புதிய விதியின் கீழ் இது 100 கி.மீ-ஆகக் குறைக்கப்பட்டு, கட்டணத்தில் சுமார் 23 சதவீதத்திற்கும் மேல் தள்ளுபடி கிடைக்கும்.

நீண்ட சுரங்கப் பாதைகள், கடல் பாலங்கள் மற்றும் நகரப் புற மேம்பாலப் பாதைகளைப் பயன்படுத்தும் வாகன ஓட்டிகளுக்கு இந்த முடிவு மிகப்பெரிய நிவாரணத்தை அளிக்கும்.

துறை சார்ந்த மண்டல அலுவலகங்கள் புதிய கட்டண விகிதங்களை விரைவில் அறிவிக்கவுள்ளதால், பயன்பாட்டாளர்கள் குறைந்த கட்டணப் பலனை உடனடியாகப் பெறத் தொடங்குவார்கள்.

ADVERTISEMENT