Loading...
முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு திட்டம் 2026: ரூ.25 லட்சம் காப்பீடு பெறுவது எப்படி?
மருத்துவக் காப்பீட்டுத் தொகையை குடும்பம் ஒன்றுக்கு ரூ.25 லட்சமாக உயர்த்தி முதலமைச்சர் விஜய் உத்தரவிட்டுள்ளார்

முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு திட்டம் 2026: ரூ.25 லட்சம் காப்பீடு பெறுவது எப்படி?

எழுதியவர் Venkatalakshmi V
Aug 19, 2026
02:21 pm

செய்தி முன்னோட்டம்

ஏழை எளிய மக்களுக்குத் தரமான மருத்துவ சிகிச்சை வழங்குவதை உறுதி செய்யும் நோக்கில் முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் தமிழ்நாடு அரசால் தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது இந்தத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் மருத்துவக் காப்பீட்டுத் தொகையை குடும்பம் ஒன்றுக்கு ரூ.5 லட்சத்தில் இருந்து ரூ.25 லட்சமாக உயர்த்தி முதலமைச்சர் விஜய் உத்தரவிட்டுள்ளார். இதன் மூலம் இதயக் கோளாறுகள் மற்றும் புற்றுநோய் போன்ற உயிருக்கு ஆபத்தான நோய்களுக்கான அறுவை சிகிச்சைகள், தீவிர சிகிச்சைகள் மற்றும் பரிசோதனைகளை எளிய மக்கள் தனியார் மருத்துவமனைகளிலும் இலவசமாகப் பெற வழியேற்பட்டுள்ளது.

தகுதிகள்

காப்பீட்டு திட்டத்திற்கான தகுதிகள்

இத்திட்டத்தில் பயன்பெற விண்ணப்பதாரர் தமிழ்நாட்டில் வசிக்க வேண்டும்.

பொதுப் பிரிவினருக்கு குடும்பத்தின் ஆண்டு வருமானம் ரூ.1,20,000-க்கு மிகாமல் இருக்க வேண்டும்.

மேலும், குடும்ப உறுப்பினர்களின் விவரங்கள் குடும்ப அட்டையில் இடம்பெற்றிருக்க வேண்டும்.

குடும்பத்தில் மாற்றுத்திறனாளிகள் இருக்கும்பட்சத்தில், மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் நெறிமுறைகளின்படி வருமான உச்சவரம்பின்றிச் சிறப்புத் தகுதியின் அடிப்படையில் காப்பீட்டுத் திட்டத்தில் இணைத்துக் கொள்ள நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

ஆவணங்கள்

தேவையான ஆவணங்கள்

காப்பீட்டு அட்டை பெற விண்ணப்பிக்கும் முன் சில முக்கிய சான்றிதழ்களைச் சமர்ப்பிக்க வேண்டும்.

குடும்ப அட்டை, குடும்ப உறுப்பினர்கள் அனைவரின் ஆதார் அட்டைகள், கிராம நிர்வாக அலுவலர் அல்லது வருவாய்த் துறையினரால் பெறப்பட்ட வருமானச் சான்றிதழ் மற்றும் தேவையான முகவரி அடையாளச் சான்றுகளைத் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.

தகுதி வாய்ந்த நபர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இயங்கும் CMCHIS மையத்தை அணுகித் தேவையான ஆவணங்களைச் சமர்ப்பிக்க வேண்டும்.

அதிகாரிகளால் ஆவணங்கள் மற்றும் பயோமெட்ரிக் விவரங்கள் சரிபார்க்கப்பட்ட பின் காப்பீட்டு அட்டை வழங்கப்படும்.

இதன் மூலம் அரசால் அங்கீகரிக்கப்பட்ட அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் பணமில்லா சிகிச்சையைப் பெற முடியும்.

அங்கீகரிக்கப்பட்ட மருத்துவமனைகளின் பட்டியலை CMCHIS அதிகாரப்பூர்வ இணையதளத்தில்](https://www.cmchistn.com/empanelment/hospital-list) பார்த்து விரிவாகத் தெரிந்துகொள்ளலாம்.

ADVERTISEMENT