மத்திய அரசின் தடையை எதிர்த்து PFI அமைப்பு தாக்கல் செய்த மனுவை நிராகரித்தது உச்ச நீதிமன்றம்
தடைசெய்யப்பட்ட பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா(PFI) அமைப்பு மத்திய அரசின் தடையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு இன்று நிராகரிக்கப்பட்டது. மக்கள் மத்தியில் வகுப்புவாத வெறுப்பைப் பரப்பியதற்காகவும், நாட்டின் ஒருமைப்பாடு, இறையாண்மை மற்றும் பாதுகாப்புக்கு பாதகமான 'சட்டவிரோத செயல்களில்' ஈடுபட்டதற்காகவும் PFI உட்பட 9 அமைப்புகளுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் செப்டம்பர் 27, 2022 அன்று, ஐந்தாண்டு தடை விதித்தது. கேரளா உட்பட பல மாநிலங்களில் வசிக்கும் இந்த PFI அமைப்பின் உறுப்பினர்களது வீடுகளில் சமீபத்தில் மிகப்பெரும் சோதனை நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
உயர் நீதிமன்றத்தை முதலில் அணுக பரிந்துரை
இந்நிலையில், மத்திய அரசு தங்களது அமைப்பின் மீது விதித்திருக்கும் தடையை நீக்கக் கோரி PFI அமைப்பு உச்ச நீதிமன்றத்தில் ஒரு மனுவை தாக்கல் செய்திருந்தது. இந்த மனுவை நீதிபதிகள் அனிருத்தா போஸ் மற்றும் பெலா எம் திரிவேதி ஆகிய இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு இன்று விசாரித்தது. PFI அமைப்பின் கோரிக்கையை கவனித்த நீதிபதிகள், இந்த பிரச்சனையை தீர்க்க உயர் நீதிமன்றத்தை முதலில் அணுகுமாறு கேட்டு கொண்டனர். அதனையடுத்து, மத்திய அரசின் தடைக்கு எதிராக பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா(PFI) அமைப்பு தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. PFI சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ஷியாம் திவான், உயர் நீதிமன்றத்தை முதலில் அணுகி இருக்க வேண்டும் என்ற உச்ச நீதிமன்றத்தின் கருத்தை ஏற்றுக்கொண்டார்.