தீபாவளி முடிந்து சென்னை திரும்ப டிக்கெட் முன்பதிவு செய்யலையா? கவலைய விடுங்க; தெற்கு ரயில்வே சூப்பர் அறிவிப்பு
தீபாவளி விடுமுறை முடிந்து திருச்சி, மதுரை போன்ற நகரங்களில் இருந்து சென்னைக்கு வரும் பயணிகள் திரும்ப வசதியாக முன்பதிவில்லாத சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. திருவிழா முடிந்து திரும்பும் ஏராளமான பயணிகளுக்கு உதவுவதே இந்த முயற்சியின் நோக்கமாகும். தமிழகம் முழுவதும் தீபாவளி கொண்டாட்டத்திற்காக மக்கள் சொந்த ஊர்களுக்கு சென்று திரும்பும் வகையில், கூடுதலாக நவம்பர் 1 அன்றும் விடுமுறை அறிவிக்கப்பட்டது. மேலும், பெரும்பாலான பள்ளி, கல்லூரிகளுக்கு 5 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டதால், ஏராளமானோர் சொந்த ஊர்களுக்குச் சென்றனர். சென்னையில் இருந்து மட்டும் 5,00,000 பேர் பயணம் செய்ததாக மதிப்பிடப்பட்டுள்ளது. இந்நிலையில், விடுமுறை முடிந்து திரும்பும் பயணிகளின் வருகையை சமாளிக்க இன்று (நவம்பர் 3) இரவு முதல் சிறப்பு ரயில்கள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
தாம்பரம் - திருச்சி சிறப்பு மெமு ரயில்
தெற்கு ரயில்வேயின் அறிவிப்பின்படி 06007/06008 என்ற எண் கொண்ட ரயில், தாம்பரம் மற்றும் திருச்சி இடையே முன்பதிவு செய்யப்படாத மெமு சிறப்பு விரைவு வண்டியாக இயக்கப்படும். இது இன்று காலை 8:30 மணிக்கு தாம்பரத்தில் இருந்து புறப்பட்டு, செங்கல்பட்டு, மேல்மருவத்தூர், திண்டிவனம், விழுப்புரம் மற்றும் பிற நிலையங்கள் வழியாக திருச்சியை மதியம் 1:40 மணிக்கு சென்றடைகிறது. இன்று இரவு 10:50 மணிக்கு திருச்சியில் இருந்து புறப்பட்டு, நவம்பர் 4ம் தேதி காலை 6:10 மணிக்கு தாம்பரம் வந்தடையும்.
சென்னை எழும்பூர் - மதுரை சிறப்பு மெமு ரயில்
மேலும், 06099/06100 என்ற எண் கொண்ட சிறப்பு விரைவு ரயில், சென்னை எழும்பூர் மற்றும் மதுரை இடையே இயக்கப்பட்டு, தாம்பரம், விழுப்புரம், திண்டுக்கல் உள்ளிட்ட முக்கிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும். இந்த ரயில், சென்னை எழும்பூரில் இருந்து காலை 10:15 மணிக்கு புறப்பட்டு, இன்று மாலை 6:30 மணிக்கு மதுரை சென்றடையும். பின்னர் இரவு 7:15 மணிக்கு அங்கிருந்து கிளம்பி அதிகாலை 3:20 மணிக்கு தாம்பரம் வந்தடையும். இந்த சேவைகள் பயண நெரிசலைக் குறைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக, தீபாவளிக்கு சொந்த ஊர் சென்றுவிட்டு சென்னை திரும்ப முன்பதிவு செய்ய முடியாமல் தவித்து வருபவர்களுக்கு உதவியாக இருக்கும் வகையில், தெற்கு ரயில்வே இந்த சேவையை அறிவித்துள்ளது.