"மக்களவைத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை": காரணத்தை வெளியிட்ட சோனியா
உடல்நலக் குறைவு காரணமாக வரும் மக்களவைத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தெரிவித்துள்ளார். தனது ஆஸ்தான தொகுதியான ரேபரேலி தொகுதி மக்களுக்கு வெளியிட்டுள்ள கடிதத்தில் இதை தெரிவித்தார். நேற்று, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ராஜஸ்தானில் இருந்து ராஜ்யசபா தேர்தலில் போட்டியிடுவதற்காக வேட்புமனு தாக்கல் செய்திருந்தார். அதன் பின்னர் இந்த விளக்கத்தை அளித்துள்ளார். "உடல்நலம் மற்றும் வயது மூப்பு காரணமாக, அடுத்த லோக்சபா தேர்தலில் நான் போட்டியிட மாட்டேன். இந்த முடிவிற்குப் பிறகு, உங்களுக்கு நேரடியாக சேவை செய்யும் வாய்ப்பு எனக்குக் கிடைக்காது. ஆனால், நிச்சயமாக, என் இதயமும் ஆன்மாவும் எப்போதும் உங்களுடன் இருக்கும்" என்று சோனியா, அந்த கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
சோனியாவின் கடிதம்
#SoniaGandhi on Thursday, February 15, in an emotional message, informed the voters of her Rae Bareli constituency in #UttarPradesh that she will not contest the upcoming #LokSabhaelections due to health and age issues. pic.twitter.com/IOhFAfQaRq— News Daily 24 (@nd24_news) February 15, 2024
காந்தி குடும்பத்தின் கோட்டை ரேபரேலி
சோனியா, 2004 பொதுத் தேர்தலில் ரேபரேலியில் வெற்றி பெற்றார். அன்று முதல், அவரின் ஆஸ்தான தொகுதியாக மாறிப்போனது ரேபரேலி. "ரேபரேலியுடன் எங்கள் குடும்பத்தின் உறவு மிகவும் ஆழமானது. சுதந்திரத்திற்குப் பிறகு நடந்த முதல் மக்களவைத் தேர்தலில் எனது மாமனார் பெரோஸ் காந்தியை இங்கிருந்து வெற்றிபெறச் செய்து டெல்லிக்கு அனுப்பியுள்ளீர்கள்". "அவருக்குப் பிறகு என் மாமியார் திருமதி இந்திரா காந்தியை சொந்தமாக்கிக் கொண்டீர்கள்," என்று சோனியா காந்தி கூறினார். பெரோஸ் காந்தி, 1952 மற்றும் 1957ல் ரேபரேலியில் இருந்து இரண்டு முறை வெற்றி பெற்றார். முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் பேரன் அருண் நேரு, 1980 இடைத்தேர்தலிலும், 1984ல், ரேபரேலியில் வெற்றி பெற்றார்.
ரேபரேலியில் பிரியங்காவை நிறுத்த திட்டம்?
ஜெய்ப்பூரில் நேற்று ராஜ்யசபாவிற்கு வேட்புமனு தாக்கல் செய்தபோது திருமதி சோனியா காந்தி உடன் அவரது மகன் ராகுல் காந்தி மற்றும் மகள் பிரியங்கா காந்தி வத்ரா உடன் சென்றனர். முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் ராஜ்யசபா பதவிக்காலம் முடிந்ததைத் தொடர்ந்து ஏப்ரலில் அந்த இடத்தை நிரப்ப, காங்கிரஸ் மூத்த தலைவர் ராஜஸ்தானில் இருந்து மேல் சபையில் அறிமுகமாக உள்ளார். திருமதி சோனியா காந்தி தற்போது தேர்தலில் போட்டியிடாத நிலையில், பிரியங்கா காந்தி வத்ரா 2024 பொதுத் தேர்தலில் ரேபரேலியில் போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.