
ஃபேஸ்புக் நேரலையில் நடந்த துப்பாக்கி சூடு: உத்தவ் தாக்கரே அணியின் பிரமுகர் படுகொலை
செய்தி முன்னோட்டம்
சிவசேனா - உத்தவ் தாக்கரே அணியை சேர்ந்த முக்கிய கட்சி பிரமுகர், ஃபேஸ்புக் நேரலையில் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்யப்பட்டார்.
அதனை தொடர்ந்து அவரை சுட்டுக் கொன்ற நபரும் தன்னை தானே சுட்டுக்கொண்டு தற்கொலை செய்து கொண்டார்.
நேற்று வியாழக்கிழமை இரவு நடைபெற்ற இந்த சம்பவம் குறித்து மும்பை, தஹிசார் பகுதி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சுட்டு கொல்லப்பட்ட நபர், உத்தவ் தாக்கரே அணியை சேர்ந்த 41 வயதான அபிஷேக் கோசல்கர்.
இவர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வினோத் கோசல்கரின் மகன் ஆவார். அவரை கொலை செய்தவர் மொரிஸ் நோரோன்ஹா என்பவர் என கூறப்படுகிறது.
முன்விரோதம் காரணமாக இந்த கொலை நடந்திருக்கலாம் என விசாரணை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
துப்பாக்கி கலாச்சாரம்
மஹாராஷ்டிராவில் தொடரும் துப்பாக்கி கலாச்சாரம்
முன்னதாக, பகை வேண்டாம் என அபிஷேக், சமரசம் பேசி, மொரிஸ்-ஐ ஃபேஸ்புக் நேரலையில் பங்கு பெற அழைத்துள்ளார். அவரும் சம்மதித்து வந்துள்ளார்.
நேரலையின் போது, தான் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து அபிஷேக்கை நோக்கி மொரிஸ் சுட்டுள்ளார்.
ஐந்து குண்டுகள் பாய்ந்த நிலையில் அபிஷேக் சரிந்து விழுந்தார். இது அனைத்தும் ஃபேஸ்புக் நேரலையில் பதிவானது.
இதையடுத்து மொரிஸ், தன்னை தானே சுட்டுக்கொண்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இருவரது உடலும் போஸ்ட்மார்ட்டம் செய்வதற்காக இருவேறு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, பாஜக எம்எல்ஏ கணபதி கெய்க்வாட், சிவசேனா - ஏக்நாத் ஷிண்டே அணியை சேர்ந்த மகேஷ் கெய்க்வாட் மீது துப்பாக்கி சூடு நடத்தினார்.
இந்த விவகாரத்தில் கணபதி கெய்க்வாட் கைது செய்யப்பட்டார்.