
பாகிஸ்தானின் முக்கிய நகரங்களின் மீது இந்தியா தாக்குதல்; தலைநகர் டெல்லியில் பாதுகாப்பு அதிகரிப்பு
செய்தி முன்னோட்டம்
ஜம்மு, ஜெய்சால்மர் மற்றும் பதான்கோட் உள்ளிட்ட இந்திய நகரங்கள் மீதான பாகிஸ்தானின் தாக்குதல்களை முறியடித்த பின்னர், வியாழக்கிழமை இரவு பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத், லாகூர் மற்றும் சியால்கோட் ஆகிய இடங்களில் இந்தியா தாக்குதல் நடத்தியது.
முன்னதாக, ஜம்மு-காஷ்மீரில் உள்ள கட்டுப்பாட்டுக் கோட்டில் பாகிஸ்தான் போர் நிறுத்த மீறல்களில் ஈடுபட்டது.
இதற்கு இந்தியப் படைகள் விரைவாக பதிலளித்தன.
எனினும் தொடர்ந்து, இந்திய நகரங்கள் மீது பாகிஸ்தான் நடத்திய தாக்குதலைத் தொடர்ந்து, ஜம்மு-காஷ்மீரில் உள்ள ஸ்ரீநகர், ஜம்மு மற்றும் ரஜோரி, பஞ்சாபில் உள்ள அமிர்தசரஸ் மற்றும் ஜலந்தர், குஜராத்தில் உள்ள பூஜ் மற்றும் எல்லையோரத்தில் உள்ள பிற நகரங்களில் மின்தடை விதிக்கப்பட்டது.
தாக்குதலை வெற்றிகரமாக முறியடித்த பின்னர், இந்தியா இந்த எதிர் தாக்குதலை மேற்கொண்டது.
ஏவுகணை தாக்குதல்
இந்தியாவின் ராணுவ நிலைகளை குறி வைத்து பாகிஸ்தான் தாக்குதல்
முன்னதாக வியாழக்கிழமை, நாட்டின் வடக்கு மற்றும் மேற்குப் பகுதிகளில் உள்ள 15 நகரங்களில் உள்ள இராணுவ நிலைகளை குறிவைக்க பாகிஸ்தான் இராணுவம் மேற்கொண்ட ஏவுகணைகள் மற்றும் ட்ரோன் தாக்குதல்களை வெற்றிகரமாக முறியடித்ததாக இந்தியா கூறியது.
பாகிஸ்தான் முயற்சிகளை முறியடிப்பதில் S-400 ஏவுகணை பாதுகாப்பு அமைப்புகள், தரையிலிருந்து வான் ஏவுகணைகள் மற்றும் ஒருங்கிணைந்த எதிர் ஆளில்லா விமான அமைப்பு பயன்படுத்தப்பட்டதாக பாதுகாப்புத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
டெல்லி
டெல்லியில் பலப்படுத்தப்பட்ட பாதுகாப்பு
பாகிஸ்தானின் ட்ரோன் தாக்குதல் முறியடிக்கப்பட்டதை அடுத்து, இந்தியாவின் பல எல்லை மாவட்டங்களில் பலத்த வெடிப்புகள், சைரன்கள் மற்றும் இருட்டடிப்பு ஏற்பட்டதை அடுத்து, டெல்லியில் உயர் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
போர் நினைவுச்சின்னமான இந்தியா கேட் அருகே உள்ள மக்கள் வெளியேறுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டனர், மேலும் அங்கு போக்குவரத்து காவல்துறையினரால் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளது.
"காவல்துறையினர் விழிப்புடன் இருப்பார்கள், சுறுசுறுப்பாக இருப்பார்கள். இரவு கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ஒவ்வொரு முக்கிய பகுதியிலும் கூடுதல் படையை நிறுத்துவோம்," என்று ஒரு காவல்துறை அதிகாரி PTIயிடம் தெரிவித்தார்.
டெல்லி அரசு தனது ஊழியர்கள் மறு உத்தரவு வரும் வரை விடுப்பில் செல்ல தடை விதித்துள்ளது.