விடுதலையாவரா டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால்? உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு
கலால் கொள்கை வழக்கில் சிபிஐயால் கைது செய்யப்பட்டதை எதிர்த்தும், ஜாமீன் கோரியும் அரவிந்த் கெஜ்ரிவால் தாக்கல் செய்த மனுக்கள் மீது உச்ச நீதிமன்றம் இன்று முக்கிய தீர்ப்பு வழங்கவுள்ளது. மதுபான கொள்கை வழக்கில் சிறையிலிருந்து சமீபத்தில் ஜாமீனில் வெளியே வந்த துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா, சஞ்சய் சிங் ஆகியோரைத் தொடர்ந்து டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலும் விடுவிக்கப்படுவாரா? அல்லது அவரது ஜாமீன் மனு மறுக்கப்படுமா? என கட்சியினரும் பொதுமக்களும் எதிர்பார்த்து காத்துள்ளனர். உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சூர்ய காந்த் மற்றும் நீதிபதி உஜ்ஜல் புயான் ஆகியோர் அடங்கிய அமர்வு இன்று காலை 10.30 மணிக்கு தீர்ப்பு வழங்குகிறது. முன்னதாக, செப்டம்பர் 5-ம் தேதியன்று இந்த மனுக்கள் மீதான தீர்ப்பை பெஞ்ச் ஒத்திவைத்திருந்தது.
மதுபான கொள்கையில் பண மோசடி செய்ததாக CBI வழக்கு
ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால், கடந்த ஜூன் 26 ஆம் தேதி மதுபானக் கொள்கையில் பணமோசடி செய்ததாக அமலாக்கத்துறையினரின் காவலில் இருந்தபோது சிபிஐயால் கைது செய்யப்பட்டார். எனினும், சில வாரங்களுக்குப் பிறகு, ஜூலை 12 அன்று, அமலாக்க வழக்கில் கெஜ்ரிவாலுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால ஜாமீன் வழங்கியது. ஆனால், சிபிஐயால் கைது செய்யப்பட்டதால் அவர் திகார் சிறையில் தொடர்ந்து இருந்தார். இந்த சூழலில் தற்போது கெஜ்ரிவாலுக்கு ஜாமீன் வழங்கப்பட்டால், ஆம் ஆத்மி கட்சித் தலைவர்களான மணீஷ் சிசோடியா, சஞ்சய் சிங், விஜய் நாயர் மற்றும் பாரத ராஷ்டிர சமிதியின் கே கவிதா ஆகியோருக்குப் பிறகு மதுக் கொள்கை வழக்கில் சிறையிலிருந்து வெளிவரும் நான்காவது உயர்மட்டத் தலைவர் ஆவார்.