அரவிந்த் கெஜ்ரிவாலின் இடைக்கால ஜாமீனுக்கு உச்ச நீதிமன்றம் விதித்த நிபந்தனைகள் என்னென்ன?
லோக்சபா தேர்தலில் பிரசாரம் செய்வதற்காக, டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜூன் 1ஆம் தேதி வரை இடைக்கால ஜாமீன் வழங்கி இன்று உத்தரவிட்டது உச்சநீதிமன்ற அமர்வு. அதன் தொடர்ச்சியாக அரவிந்த் கெஜ்ரிவால் டெல்லி திகார் சிறையில் இருந்து இன்னும் சில மணி நேரத்தில் விடுவிக்கப்பட உள்ளார். இடைக்கால ஜாமீனுக்கு எதிரான அமலாக்க இயக்குநரகத்தின் வாதங்களுக்கு, "21 நாட்கள் பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்தாது" என்று உச்ச நீதிமன்றம் கூறிய அதே வேளையில், டெல்லி முதல்வர் வெளியில் இருக்கும்போது என்ன செய்ய முடியும் மற்றும் என்ன செய்யக்கூடாது என்பதற்கான கடுமையான நிபந்தனைகளையும் பட்டியலிட்டுள்ளது. அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு 5 ஜாமீன் நிபந்தனைகளை உச்ச நீதிமன்றம் விதித்துள்ளது.
ஐந்து ஜாமீன் நிபந்தனைகள் என்னென்ன?
அரவிந்த் கெஜ்ரிவால், ரூ. 50,000 மதிப்புள்ள ஜாமீன் பத்திரங்களையும், அதே தொகைக்கு ஒரு ஷ்யூரிட்டி பத்திரத்தையும் வழங்க வேண்டும். இது சிறைக் கண்காணிப்பாளரால் ஒப்புதல் அளிக்கப்படவேண்டும். அரவிந்த் கெஜ்ரிவால் முதல்வர் அலுவலகம் மற்றும் டெல்லி தலைமைச் செயலகம் செல்ல தடை. டெல்லியின் லெப்டினன்ட் கவர்னர் (எல்ஜி) வி.கே.சக்சேனாவின் அனுமதி/ஒப்புதலைப் பெறுவதற்குத் தேவைப்படும் மற்றும் அவசியமானால் தவிர, அதிகாரப்பூர்வ கோப்புகளில் அவர் கையெழுத்திடக்கூடாது. கெஜ்ரிவால் மீது நடந்து வரும் வழக்கில், குறிப்பாக டெல்லி மதுக் கொள்கை வழக்கில், மார்ச் 21 அன்று அமலாக்க இயக்குநரகத்தால் கைது செய்யப்பட்ட வழக்கில், எந்தக் கருத்தையும் தெரிவிக்க கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளார்.டெல்லி மதுபான போலீஸ் வழக்குடன் தொடர்புடைய அதிகாரப்பூர்வ கோப்புகளையும், சாட்சிகளையும் அணுகுவதற்கு தடைசெய்யப்பட்டுள்ளது.