Loading...
வீட்டு கூரை சோலார் பேனல் மானியம்: மத்திய, மாநில அரசுகளின் ரூ.1 லட்சம் நிதியுதவி பெறும் முறை
வீடுகளின் கூரையில் சோலார் பேனல்கள் அமைக்க தமிழ்நாடு அரசு புதிய மானியத் திட்டத்தை இன்று தொடங்கி வைக்கிறது

வீட்டு கூரை சோலார் பேனல் மானியம்: மத்திய, மாநில அரசுகளின் ரூ.1 லட்சம் நிதியுதவி பெறும் முறை

எழுதியவர் Venkatalakshmi V
Sep 21, 2026
10:25 am

செய்தி முன்னோட்டம்

மின்சார பயன்பாடு அதிகரிப்பு மற்றும் காற்றாலை மின் உற்பத்தி சரிவு போன்ற காரணங்களால் ஏற்படும் மின்வெட்டைத் தவிர்த்து, வீட்டு மின் கட்டணத்தைக் குறைக்கும் நோக்கில், வீடுகளின் கூரையில் சோலார் பேனல்கள் அமைக்க தமிழ்நாடு அரசு புதிய மானியத் திட்டத்தை இன்று தொடங்கி வைக்கிறது. மத்திய அரசின் 'பிரதமர் சூர்யா கர்' திட்டத்தின் கீழ் வீட்டு கூரையில் 3 கிலோவாட்(3kW) வரை சோலார் பேனல் அமைக்க அதிகபட்சமாக ரூ.78,000 மானியம் வழங்கப்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக, மாநில அரசின் சார்பில் கூடுதல் மானியமாக ரூ.22,000 வரை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பயனாளிகள் பெறும் மொத்த மானியத் தொகை ரூ.1 லட்சமாக உயர்கிறது. இத்திட்டத்திற்காக தமிழக அரசு ரூ.50 கோடி நிதியை ஒதுக்கியுள்ளது.

மானியத் தொகை

யாருக்கு எவ்வளவு மானியம் கிடைக்கும்?

வீட்டு உபயோக நுகர்வோரின் மின் உற்பத்தி திறனுக்கு ஏற்ப மானியத்தொகை பிரித்து வழங்கப்படுகிறது:

1kW மின் உற்பத்தி: மத்திய அரசு அளிக்கும் ரூ.30,000 மானியத்துடன், மாநில அரசு ரூ.5,000 கூடுதலாக வழங்கி மொத்தம் ரூ.35,000 வழங்கப்படும்.

2kW மின் உற்பத்தி: மத்திய அரசின் ரூ.60,000 மானியத்துடன், மாநில அரசு ரூ.10,000 சேர்த்து மொத்தம் ரூ.70,000 வழங்கப்படும்.

3kW மின் உற்பத்தி: மத்திய அரசின் ரூ.78,000 மானியத்துடன், மாநில அரசிடமிருந்து ரூ.22,000 சேர்த்து அதிகபட்சமாக ரூ.1 லட்சம் மானியம் கிடைக்கும்.

கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் விண்ணப்பித்த பயனாளிகளுக்கும் இக்கூடுதல் மானியம் பொருந்தும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மார்ச் 2027-க்குள் 1 லட்சம் பயனாளிகளை இத்திட்டத்தில் இணைக்க தமிழ்நாடு பசுமை எரிசக்தி கழகம்(TNGECL) இலக்கு நிர்ணயித்துள்ளது.

செயல்பாடு

1 லட்சம் பேருக்கு கிடைக்கும் வாய்ப்பு

மத்திய அரசின் இணையதளம் வழியாகப் பெறப்படும் விண்ணப்பதாரர்களின் தரவுகள் சரிபார்க்கப்பட்டு, சோலார் இணைப்பு இயங்க தொடங்கியதும் மாநில அரசின் மானியத் தொகை நேரடியாக பயனாளிகளின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும்.

ஆர்வமுள்ள பயனாளிகள் pmsuryaghar.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தங்களது மொபைல் மற்றும் ஈமெயில் மூலம் பதிவு செய்ய வேண்டும்.

பின்னர் "Apply For Rooftop Solar" தேர்வு செய்து, மாநிலம், மாவட்டம், மின் விநியோக நிறுவனம், சோலார் திறன் மற்றும் முகவரி ஆகிய விவரங்களை பதிவிட வேண்டும்.

இறுதியாக மின் கட்டண ரசீது மற்றும் அடையாளச் சான்றுகளை பதிவேற்றி விண்ணப்பத்தைச் சமர்ப்பித்தால், அதிகாரிகள் ஆய்வு செய்து ஒப்புதல் அளிப்பார்கள்.

ADVERTISEMENT