'இந்தியாவை அவமதித்த ராகுல் காந்தி': மூதறிஞர் ராஜாஜியின் கொள்ளுப் பேரன் குற்றச்சாட்டு
ராகுல் காந்தி தனது அமெரிக்க பயணத்தின் போது தனது இந்திய எதிர்ப்பு கருத்துக்காக உடனடி மற்றும் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் என்று மூதறிஞர் ராஜாஜியின் கொள்ளுப்பேரன் சிஆர் கேசவன் வலியுறுத்தியுள்ளார். கடந்த ஆண்டு காங்கிரசில் இருந்து விலகி, பாஜகவில் இணைந்த சிஆர் கேசவன் பாஜகவின் தேசிய செய்தித் தொடர்பாளராக உள்ளார். கேசவன் ராகுல் காந்தியின் அமெரிக்க விஜயத்தை பாரத் பத்நாம் யாத்ரா (இந்திய துஷ்பிரயோக பயணம்) என்று குறிப்பிட்டார். கேசவன் மேலும், ராகுல் காந்தி உண்மையை வேண்டுமென்றே திரித்து பொய்யை புனைந்து வெளிநாட்டில் இந்தியாவின் மதிப்பையும் மரியாதையையும் இழிவுபடுத்தவும் குறைக்கவும் முயற்சித்து வருகிறார் என்றும் குற்றம் சாட்டினார். இதுபோன்ற செயல்களை இந்திய மக்களால் மறக்கவோ மன்னிக்கவோ முடியாது என்றும் அவர் கூறினார்.
ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க கேசவன் வலியுறுத்தல்
கேசவன் ராகுல் காந்தி தனது மோசமான கருத்துக்காக இந்த தேசத்திடம் உடனடியாக நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வலியுறுத்தினார். மேலும், மகாபாரதத்தில் வரும் சிசுபாலன் கதாப்பாத்திரத்தை ராகுல் காந்தியுடன் ஒப்பிட்ட சிஆர் கேசவன், சிசுபாலன் கிருஷ்ணரை பொதுவில் அவமதித்தார், வெளிநாட்டில் இருந்தபோது ராகுல் காந்தி இந்தியாவை அவமதித்தார் என்றார். முன்னதாக, செவ்வாயன்று (செப்டம்பர் 10) வாஷிங்டனில் உள்ள புகழ்பெற்ற தேசிய பத்திரிகையாளர் மன்றத்தில் நடந்த செய்தியாளர் சந்திப்பின் போது ராகுல் காந்தி, சீனாவுடனான மோதலை கையாண்டது குறித்து நரேந்திர மோடி அரசாங்கத்தை விமர்சித்தார். மேலும், இட ஒதுக்கீடு உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்தும் பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.