'பிரதமர் மோடி ஓபிசி வகுப்பினை சேர்ந்தவர் இல்லை' என சாடும் ராகுல்; மறுக்கும் பாஜக
பிரதமர் நரேந்திர மோடி, தன்னை இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த (ஓபிசி) குடும்பத்தைச் சேர்ந்தவர் என்று பொய்யாகக் கூறுவதாக காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி வியாழக்கிழமை குற்றம் சாட்டியுள்ளார். ஒடிசாவில் தனது பாரத் ஜோடோ நியாய யாத்திரையின் நிறைவு நாளில், ஜார்சுகுடாவில் அவர் ஆற்றிய உரையின் போது காந்தி இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்தார். ராகுல் காந்தியின் இந்த கருத்தை தொடர்ந்து, பாஜகவின் தலைவர்கள்,'பிரதமரின் ஜாதி குறித்த ராகுல் காந்தியின் அறிக்கை தொடர்பான உண்மைகள்' என்ற தலைப்பில் ஒரு சுருக்கமான அறிக்கையை வெளியிட்டு உள்ளது. அதில் ராகுல் காந்தியின் கூற்றை மறுத்துள்ளது கட்சி.
பிரதமர் மோடியின் சாதி பற்றி ராகுல் கூறுவது என்ன?
பிரதமர் மோடி தெலி இனத்தைச் சேர்ந்தவர் என்று ராகுல் காந்தி தெரிவித்தார். 2000 ஆம் ஆண்டு குஜராத்தில் பாரதீய ஜனதா கட்சியின்ஆட்சிக் காலத்தில், இந்த டெலி OBC பட்டியலில் சேர்க்கப்பட்டது என்று அவர் குற்றம் சாட்டினார். அதற்கு முன்னர் வரை இந்த சாதி ஜெனரல் பட்டியலில் தான் இருந்தது எனவும் அவர் கூறினார். 1994 ஆம் ஆண்டில், காங்கிரஸின் சபில்தாஸ் மேத்தாவின் முதல்வர் பதவியில், குஜராத் அரசாங்கம் ஏற்கனவே உள்ள 82 OBC சாதிகளை மேலும் 38 சாதிகளைச் சேர்த்து விரிவுபடுத்தியது. அரசு குறிப்பின்படி, பிரதமர் மோடி மோத் காஞ்சி இனத்தைச் சேர்ந்தவர். முன்னதாக ஒடிசாவில், தேர்தலில் வெற்றி பெற்றதும், நாடு முழுவதும் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என்று ராகுல் காந்தி உறுதியளித்தார்.
ராகுல் காந்தியின் கூற்றுகளுக்கு மத்திய அரசு பதில்
ராகுல் காந்திக்கு பதிலடி கொடுக்கும் வகையில், மத்திய அரசு சில மணிநேரங்களுக்குப் பிறகு, ஒரு சுருக்கமான குறிப்பை வெளியிட்டது. தெலி சாதியை ஓபிசி பட்டியலில் சேர்க்கும் அறிவிப்பு காங்கிரஸ் ஆட்சியின் போது வெளியிடப்பட்டது என்பதை அந்த குறிப்பு தெளிவுபடுத்தியது. "...குஜராத்தில் ஒரு கணக்கெடுப்புக்குப் பிறகு, மண்டல் கமிஷன் இண்டெக்ஸ் 91(A) இன் கீழ் ஓபிசிகளின் பட்டியலைத் தயாரித்தது. அதில் மோத் காஞ்சி சாதி அடங்கும். இந்திய அரசின் குஜராத்தின் 105 ஓபிசி ஜாதிகளின் பட்டியலில் மோத் காஞ்சியும் சேர்க்கப்பட்டுள்ளது. .," என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. பிரதமர் மோடி மாற்று பிரிவை சேர்ந்தவர் என்பதாலேயே அவர் கணக்கெடுப்பிற்கு அனுமதி தரவில்லை என குற்றம் சாட்டினார் ராகுல் காந்தி.