ஜனவரி 14ல் மணிப்பூர் முதல் மும்பை வரை பாரத் நியாயா யாத்திரையை தொடங்குகிறார் ராகுல் காந்தி
ஜனவரி 14ஆம் தேதி முதல் மணிப்பூர் முதல் மும்பை வரை பாரத் ஜோடோ யாத்ராவின் இரண்டாவது பகுதியை காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தொடங்குகிறார். பாரத் நியாய யாத்ரா என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ள இந்த பயணம், நாட்டின் கிழக்கு மற்றும் மேற்கு பகுதிகளை இணைக்கும் வகையில், வடகிழக்கு மாவட்டமான மணிப்பூரில் தொடங்கி, மும்பையில் முடிவடைகிறது. இந்த பயணத்தில் ராகுல் காந்தி 14 மாநிலங்களின் 85 மாவட்டங்கள் வழியாக நடை பயணம் மேற்கொள்வார். மணிப்பூர், நாகாலாந்து, அசாம், மேகாலயா, மேற்கு வங்காளம், பீகார், ஜார்க்கண்ட், ஒடிசா, உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தான், குஜராத் மற்றும் மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்கள் வழியாக 6,200 கிலோமீட்டர்கள் ராகுல் காந்தி பயணிக்க உள்ளார்.
மார்ச் 20ல் முடிவடையும் நடை பயணம்
இந்த நடைபயணம், நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னதாக மார்ச் 20 ஆம் தேதி முடிவடைகிறது. இப்பயணத்தை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே கொடியசைத்து துவக்கி வைக்கிறார். அதிகபட்ச அணுகலை பெறுவதற்காக, நடை பயணத்துடன் ராகுல் காந்தி பேருந்துகளிலும் சென்று மக்களை சந்திக்கிறார். கடந்த ஆண்டு செப்டம்பரில் கன்னியாகுமரியில் தொடங்கி 5 மாத பயணமாக, காஷ்மீர் வரை ராகுல் காந்தி பாரத் ஜோடோ யாத்திரையை மேற்கொண்டார். இவரின் பயணத்திற்கு பெரும் வரவேற்பு கிடைத்த நிலையில், இந்த ஆண்டு நடைபெற்ற கர்நாடக மற்றும் தெலுங்கானா தேர்தலில் அக்கட்சிக்கு கிடைத்த வெற்றியில், ராகுல் காந்தியின் நடை பயணத்திற்கு முக்கிய பங்கு உள்ளதாக தொண்டர்கள் கருதுகின்றனர்.