உளவு பார்த்ததாக 8 முன்னாள் இந்திய கடற்படை அதிகாரிகளுக்கு மரண தண்டனை விதித்தது கத்தார்
உளவு பார்த்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட எட்டு இந்திய கடற்படை அதிகாரிகளுக்கு, கத்தார் நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது. இந்த தீர்ப்பு குறித்து அதிர்ச்சியை வெளிப்படுத்திய இந்திய அரசு, அனைத்து சட்ட வாய்ப்புகளையும் ஆராய்ந்து வருவதாகக் கூறியுள்ளது. இது குறித்து கடந்த ஏப்ரல் மாதம், கத்தார் சட்ட நடவடிக்கைகளில் இந்தியா தலையிடாது என்று வெளியுறவு அமைச்சகத்தின் (MEA) செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்சி கூறியதாக தி ஹிந்து செய்தி வெளியிட்டுள்ளது. குற்றம் சுமத்தப்பட்ட 8 கடற்படை அதிகாரிகளும், கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் கத்தார் சிறையில் உள்ளனர். எட்டு நபர்களில், இந்தியப் போர்க்கப்பல்களுக்கு தலைமை தாங்கிய உயர் அதிகாரிகளும் அடங்குவர் என்று ஹிந்துஸ்தான் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
பின்கதை என்ன?
குற்றம் சுமத்தப்பட்ட முன்னாள் கடற்படை ஊழியர்கள், கத்தாரின் ஆயுதப் படைகளுக்கு பயிற்சி மற்றும் தொடர்புடைய சேவைகளை வழங்கும் ஒரு தனியார் நிறுவனமான Dahra Global Technologies and Consultancy Services இல் பணிபுரிந்தனர். அவர்கள், இஸ்ரேலுக்காக கத்தாரில் உளவு பார்த்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டவர்கள் என்றும், ஆராய்ச்சி மற்றும் பகுப்பாய்வு பிரிவில் (RAW) பணிபுரிந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டதாக பாகிஸ்தானின் எக்ஸ்பிரஸ் ட்ரிப்யூன் தெரிவித்துள்ளது. குற்றம் சாட்டப்பட்ட அதிகாரிகளின் ஜாமீன் மனுக்கள் நிராகரிக்கப்பட்டு, நீதிமன்ற வழக்கினை எதிர்கொண்டனர். அதன் முடிவில், இன்று இவர்களுக்கு மரண தண்டனை விதித்துள்ளது அந்நாட்டின் நீதிமன்றம்.
கத்தார் அதிகாரிகளிடம் மின்னணு ஆதாரங்கள் இருப்பதாக தகவல்
கைது செய்யப்பட்டவர்களில் கேப்டன்கள் நவ்தேஜ் சிங் கில், பிரேந்திர குமார் வர்மா, சவுரப் வசிஷ்ட் மற்றும் கமாண்டர்கள் அமித் நாக்பால், பூர்ணேந்து திவாரி, சுகுணகர் பகாலா, சஞ்சீவ் குப்தா மற்றும் மாலுமி ராகேஷ் ஆகியோர் அடங்குவர். மிட்ஜெட் நீர்மூழ்கிக் கப்பல்களை உருவாக்கும் முக்கியமான திட்டத்தில், அவர்கள் பணியாற்றி வருவதாக கூறப்படுகிறது. இந்த விவகாரம் தொடர்பாக நாட்டிற்கு எதிராக உளவு பார்த்ததற்கான, மின்னணு ஆதாரங்கள் இருப்பதாக கத்தார் அதிகாரிகள் கூறுகின்றனர். இது, பாகிஸ்தானின் புலனாய்வு அமைப்புகளால்(ஐஸ்) ஜோடிக்கப்பட்ட வழக்காக இருக்கலாம் எனவும், இந்திய அதிகாரிகளை சிக்க வைக்க அவர்கள் நடத்தும் நாடகமாக இருக்கலாம் எனவும் என்று ANI அறிக்கை கூறியுள்ளது.