பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுத்த ரஷ்யா மற்றும் உக்ரைன் அதிபர்கள்
மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி மற்றும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் இருவரும் பிரதமர் மோடியை அந்தந்த நாடுகளுக்கு அழைத்ததாக வட்டாரங்கள் தெரிவித்தன. கடந்த புதன்கிழமை, தன்னுடைய எக்ஸ் தளத்தில் பிரதமர் இட்ட ஒரு பதிவில், 'பிரதமர் மோடி புடினுடன் பேசியதாகவும், ரஷ்யாவின் ஜனாதிபதியாக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு வாழ்த்து தெரிவித்ததாகவும் பதிவிடப்பட்டிருந்தது. "வரும் ஆண்டுகளில் இந்தியா-ரஷ்யா சிறப்பு மற்றும் சலுகை பெற்ற மூலோபாய கூட்டாண்மையை மேலும் ஆழப்படுத்தவும், விரிவுபடுத்தவும் இணைந்து பணியாற்ற நாங்கள் ஒப்புக்கொண்டோம்" என்று பிரதமர் மோடி கூறினார். மற்றொரு பதிவில், இந்தியா-உக்ரைன் கூட்டுறவை வலுப்படுத்துவது குறித்து ஜெலென்ஸ்கியுடன் பேசியதாக பிரதமர் மோடி தெரிவித்திருந்தார்.
இந்தியாவுடனான கூட்டணியை வரவேற்கும் உக்ரைன்
இதற்குப் பதிலளித்த உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி,"உக்ரைனின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாடு, மனிதாபிமான உதவி, அமைதிக் கூட்டங்களில் பங்கேற்பது ஆகியவற்றுக்கு இந்தியாவின் ஆதரவுக்கு நன்றி தெரிவிக்க பிரதமர் நரேந்திர மோடியுடன் பேசினேன்". "எங்கள் இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவது குறித்து நாங்கள் விவாதித்தோம், அதில் எங்கள் குழுக்களின் கூட்டம் மற்றும் எதிர்காலத்தில் புதுதில்லியில் ஒத்துழைப்புக்கான அரசுகளுக்கிடையேயான ஆணையத்தின் அமர்வு ஆகியவை அடங்கும்," என்று கூறினார். "இந்தியாவுடனான வர்த்தகம் மற்றும் பொருளாதார உறவுகளை வலுப்படுத்துவதில் உக்ரைன் ஆர்வமாக உள்ளது, குறிப்பாக "விவசாய ஏற்றுமதி, விமான போக்குவரத்து ஒத்துழைப்பு மற்றும் மருந்து மற்றும் தொழில்துறை தயாரிப்பு வர்த்தகம்" ஆகியவற்றில் உக்ரைன் ஆர்வமாக உள்ளது என்று ஜெலென்ஸ்கி கூறினார்.
ரஷ்யா-உக்ரைன் போரில் இந்தியாவின் நிலைப்பாடு
புடினின் நடவடிக்கைகளை விமர்சிக்கும் பல ஐ.நா. வாக்குகளில் இருந்து இந்தியா விலகியிருந்தாலும், இந்திய அரசு தனது அசெளகரியத்தை வெளிப்படுத்தவும் தவறவில்லை. அதே நேரத்தில் உக்ரைன் மீதான பாதுகாப்பு கவுன்சில் தீர்மானத்தில் ஆதரவளிக்க ரஷ்யாவின் கோரிக்கையை நிராகரித்தது மற்றும் புச்சாவில் உக்ரேனிய குடிமக்களுக்கு எதிரான அட்டூழியங்களை கண்டித்து, சர்வதேச விசாரணைக்கும் அழைப்பு விடுத்தது. பிரதமர் நரேந்திர மோடி, ஜனாதிபதி புடினுடனான சந்திப்பில், "இன்றைய சகாப்தம் போரின் சகாப்தம் அல்ல" என்று வலியுறுத்தினார் என செய்திகள் தெரிவிக்கின்றன