இந்தியாவின் பெயரை 'பாரதம்' என்று மாற்ற பாஜக அரசு நடவடிக்கை
குடியரசு தலைவர் மாளிகையில் நடைபெற இருக்கும் ஜி20 உச்சிமாநாட்டின் இரவு விருந்திற்கான அழைப்பிதழில் 'இந்திய ஜனாதிபதி' என்று குறிப்பிடுவதற்கு பதிலாக 'பாரதத்தின் ஜனாதிபதி' என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதிகாரபூர்வமாக ஒரு அரசு அழைப்பிதழில் இந்தியாவுக்கு பதிலாக 'பாரதம்' என்ற பெயர் உபயோகிக்கப்படுவது இதுவே முதல்முறையாகும். அதுவும் ஒரு சர்வதேச அரங்கில் இந்தியாவின் பெயரை 'பாரதம்' என்று குறிப்பிட்டிருப்பது ஒரு குறிப்பிடத்தக்க மாற்றத்தை குறிக்கிறது.
'பாரதம்' என்ற சொல்லை பயன்படுத்துவதில் எதுவும் பிரச்சனை இருக்கிறதா?
"பாரதம்" என்ற சொல் அரசியலமைப்பிலும் உள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். "இந்தியா, அதாவது பாரதம், மாநிலங்களின் ஒன்றியமாக இருக்கும்" என்று இந்திய அரசியலமைப்பின் பிரிவு 1இல் குறிப்பிடப்பட்டுள்ளது. வெளிநாட்டு பிரதிநிதிகளுக்கு வழங்கப்பட்ட ஜி20 கையேட்டிலும் "பாரதம்" என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா இந்த பெரிய மாற்றத்திற்கு வரவேற்பு தெரிவித்துள்ளார். "பாரத குடியரசு - நமது நாகரிகம் அமிர்த காலை நோக்கி தைரியமாக முன்னேறி வருவதில் மகிழ்ச்சியும் பெருமையும் கொள்கிறேன்" என்று அவர் ட்விட்டரில்(எக்ஸ்) தெரிவித்துள்ளார்.
'பாரதம்' என்ற பெயர் மாற்றத்திற்கு காங்கிரஸ் கடும் எதிர்ப்பு
குடியரசு தலைவர் மாளிகையில் நடைபெற இருக்கும் ஜி20 உச்சிமாநாட்டின் இரவு விருந்திற்கான அழைப்பிதழ்களில் வழக்கமான 'இந்திய ஜனாதிபதி' என்பதற்கு பதிலாக 'பாரதத்தின் ஜனாதிபதி' என்று பொறிக்கப்பட்டிருந்ததாக காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் ட்விட்டரில் கூறியுள்ளார். "வெளியான செய்திகள் உண்மைதான். செப்டம்பர் 9 ஆம் தேதி ராஷ்டிரபதி பவனில் நடைபெற இருக்கும் G20 விருந்துக்கான அழைப்பிதழில் 'இந்திய ஜனாதிபதி' எனபதற்கு பதிலாக 'பாரதத்தின் ஜனாதிபதி' என்ற குறிப்பிடப்பட்டுள்ளது. அரசியலமைப்பின் பிரிவு 1, 'இந்தியா, அதாவது பாரதம், மாநிலங்களின் ஒன்றியமாக இருக்கும்' என்று கூறுகிறது. ஆனால் தற்போது இந்த 'மாநிலங்களின் ஒன்றியம்' என்பதே தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது." என்று அவர் பாஜகவை சாடியுள்ளார்.
காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷின் ட்விட்டர் பதிவு
இதை இரண்டு நாட்களுக்கு முன்பே கணித்தது ஆர்எஸ்எஸ்
இரண்டு நாட்களுக்கு முன்புதான், இந்தியாவுக்குப் பதிலாக பாரதம் என்று நம் நாடு அழைக்கப்பட வேண்டும் என்ற கருத்தை ஆளும் பாஜகவின் சித்தாந்த வழிகாட்டியான ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங்கம்(ஆர்எஸ்எஸ்) கூறி இருந்தது. "இந்தியா என்ற வார்த்தையைப் பயன்படுத்துவதை விட்டுவிட்டு, பாரதம் என்ற வார்த்தையை பயன்படுத்தத் தொடங்க வேண்டும். பாரதத்தின் பெயர் நிலைத்திருக்க வேண்டும். உலகில் எங்கு சென்றாலும் பாரதம், பேச்சிலும் எழுத்திலும் பாரதம் என்று எல்லோரும் சொல்ல வேண்டும்" என்று ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் கூறி இருந்தார். கடந்த ஜூலை மாதம், எதிர்க்கட்சிகள் தங்கள் கூட்டணிக்கு INDIA என்று பெயரிட்டதில் இருந்தே, INDIAவா பாஜகவா என்ற சர்ச்சை நடந்தது கொண்டிருக்கிறது என்பது குறிப்பிட வேண்டியது.
நாடாளுமன்றத்தின் சிறப்பு அமர்வில் இந்தியாவின் பெயர் மாற்றப்படுமா?
செப்டம்பர் 18 முதல் 22 வரை நடைபெறவுள்ள நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத் தொடரில், இந்தியாவின் பெயரை 'பாரதம்' என்று மாற்ற நரேந்திர மோடி தலைமையிலான அரசாங்கம் நடவடிக்கை எடுக்கலாம் என்று கூறப்படுகிறது. அரசியலமைப்பு சட்டத்தை திருத்துவதன் மூலம் இந்தியாவை 'பாரதம்' என மறுபெயரிட வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது. முக்கியமாக, ஆர்எஸ்எஸ் உள்ளிட்ட வலது சாரி அமைப்புகள் இதற்கு அழைப்பு விடுத்து வருகின்றன. இதே கருத்தை பிரதமர் நரேந்திர மோடியும் முன்பு கூறியிருந்தார். ஆகஸ்ட் 15, 2022 அன்று, செங்கோட்டையின் அரண்களிலிருந்து, ஐந்து உறுதிமொழிகளை எடுக்குமாறு குடிமக்களிடம் அவர் வேண்டுகோள் விடுத்தார். அதில் ஒரு வேண்டுகோள் அடிமைத்தனத்தின் ஒவ்வொரு தடயத்திலிருந்தும் விடுதலை பெற்று, நாட்டின் பூர்வீக அடையாளத்தைத் தழுவதாகும்.
இந்த காலவரிசையைப் பகிரவும்