பூஞ்ச் தாக்குதல்: அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட எம்4 கார்பைன் துப்பாக்கியை பயன்படுத்திய பயங்கரவாதிகள்
ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் பகுதியில், இந்திய ராணுவத்தின் மீது நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதலுக்கு மக்கள் பாசிச எதிர்ப்பு முன்னணி (PAFF) அமைப்பு பொறுப்பேற்றுள்ள நிலையில், தாக்குதலுக்கு அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட எம்4 கார்பைன் துப்பாக்கியை பயன்படுத்தியதாக சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளது. பூஞ்ச் பகுதியில் நேற்று ராணுவத்தினர் மீது நடத்தப்பட்ட தாக்குதலில், ஐந்து வீரர்கள் கொல்லப்பட்டனர். மாலை 3:45 மணியளவில், தேடுதல் நடவடிக்கைக்கு ஆதரவாக சென்ற இரண்டு இராணுவ வாகனங்கள், தாத்யார் மோர் அருகே வளைவில் திரும்பும்போது, பதுங்கி இருந்த தீவிரவாதிகளின் தாக்குதலுக்கு உள்ளானது. இந்த தாக்குதலைத் தொடர்ந்து, இப்பகுதியில் மோப்பநாய் உதவியுடன் போலீசார் மற்றும் ராணுவத்தினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
முந்தைய தாக்குதல்களிலும் கைப்பற்றப்பட்ட எம்4 துப்பாக்கிகள்
காஷ்மீரில் தீவிரவாதிகள் எம்4 போன்ற, சக்தி வாய்ந்த ஆயுதங்களை பயன்படுத்துவது இது முதல் முறையல்ல. கடந்த 2016 ஆம் ஆண்டு முதல், அப்பகுதியில் கொல்லப்பட்ட ஜெய்ஷ்-இ-முகமது (JeM) பயங்கரவாதிகளிடம் இருந்து, நான்கு எம்4 ரக துப்பாக்கிகளை எஃகு தோட்டாக்களுடன் பாதுகாப்புப் படையினர் மீட்டுள்ளனர். எம்4 கார்பைன் என்பது, 1980களில் அமெரிக்காவில் உருவாக்கப்பட்ட ஒரு இலகுரக, வாயுவால் இயங்கும் கார்பைன் துப்பாக்கி ஆகும். அமெரிக்க ராணுவத்திற்கு முதன்மையான ஆயுதமாக திகழ்ந்த இது, உலகில் 80க்கும் மேற்பட்ட நாடுகளில் பயன்படுத்தப்படுகிறது. நெருக்கமான சண்டைகளுக்காக வடிவமைக்கப்பட்ட எம்4 வகை துப்பாக்கிகள், எளிதாக எடுத்துச் செல்ல கூடியது. இவ்வகை துப்பாக்கிகள், துல்லிய, நம்பகமான மற்றும் பல்வேறு போர் சூழ்நிலைகளுக்கு தகுந்த ஆயுதமாக அறியப்படுகிறது.