Loading...
சென்னை மெட்ரோ ரயிலில் பிரதமர் மோடி மற்றும் விஜயுடன் பயணித்தது விண்வெளி மற்றும் நவீன தொழில்நுட்பங்கள் ஸ்டார்ட்அப் நிறுவனர்களாம்
இந்தச் சந்திப்பின் போது பல்வேறு துறைகளைச் சேர்ந்த நிறுவனங்கள் தங்களது தொழில்நுட்பப் படைப்புகளைப் பிரதமரிடம் விளக்கின

சென்னை மெட்ரோ ரயிலில் பிரதமர் மோடி மற்றும் விஜயுடன் பயணித்தது விண்வெளி மற்றும் நவீன தொழில்நுட்பங்கள் ஸ்டார்ட்அப் நிறுவனர்களாம்

எழுதியவர் Venkatalakshmi V
Oct 13, 2026
01:44 pm

செய்தி முன்னோட்டம்

கடந்த அக்டோபர் 11-ஆம் தேதி சென்னை வந்திருந்த பிரதமர் நரேந்திர மோடி, போரூர் - பூந்தமல்லி இடையேயான புதிய மெட்ரோ ரயில் சேவையைத் தொடங்கி வைத்து, அதில் பயணம் மேற்கொண்டார். அவருடன் தமிழக முதல்வர் விஜய்யும் உடன் பயணித்தார். இந்த பயணத்தின் போது, தமிழகத்தை சேர்ந்த 15-க்கும் மேற்பட்ட முன்னணி ஸ்டார்ட்அப் நிறுவனங்களின் தலைமைச் செயல் அதிகாரிகளும் கலந்துகொண்டு தங்களது புதிய தொழில் யோசனைகளைப் பிரதமரிடம் நேரடியாக எடுத்துரைத்தனர். மெட்ரோ ரயிலில் நடைபெற்ற இந்தச் சந்திப்பின் போது பல்வேறு துறைகளைச் சேர்ந்த நிறுவனங்கள் தங்களது தொழில்நுட்பப் படைப்புகளைப் பிரதமரிடம் விளக்கின.

புதுமையான திட்டங்கள்

ஸ்டார்ட்அப் முனைவோர்களின் புதுமையான திட்டங்கள்

செயற்கைக்கோள் அடிப்படையிலான மதிப்பீடுகள் மூலம் கட்டுமானப் பணிகள், பாலங்கள் மற்றும் சாலைகளின் முன்னேற்றம், அபாயங்களைக் கண்காணிப்பது குறித்து விக்னேஷ் கந்தசாமி விளக்கினார். மேலும் சதுப்புநிலக் காடுகள் மற்றும் ஏரிகள் பாதுகாப்பு தொடர்பாகத் தமிழக அரசுடன் இணைந்து மேற்கொண்ட பணிகளையும் அவர் விவரித்தார். நாட்டின் விமானப் போக்குவரத்து சூழலை மேலும் வலுப்படுத்துவது மற்றும் உள்நாட்டுப் பங்குதாரர்களின் பங்களிப்பு குறித்து மற்றொரு நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியான சசீந்தர் மாரிமுத்து விவாதித்தார்.

ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ் இணை நிறுவனர் மற்றும் சிஇஓ ரமேஷ் குமார், கடந்த ஜூலை மாதம் தங்கள் நிறுவனத்தின் 'விக்ரம் 1' ராக்கெட் மூலம் நானோ செயற்கைக்கோளை வெற்றிகரமாக நிலைநிறுத்திய விபரங்களைப் பிரதமரிடம் பகிர்ந்து கொண்டார்.

ஆதரவு

பிரதமரின் ஊக்கமும் ஆதரவும்

ஒவ்வொரு ஸ்டார்ட்அப் நிறுவன நிர்வாகிக்கும் தனித்தனியாக நேரம் ஒதுக்கப்பட்டு அவர்களின் திட்டங்கள் கவனமாகக் கேட்கப்பட்டன.

புத்தொழில் முனைவோர்களின் கருத்துக்களைக் கூர்ந்து கவனித்த பிரதமர் மோடி, வளர்ந்து வரும் விண்வெளித் துறை மற்றும் நவீன தொழில்நுட்பத் துறைகளுக்கு மத்திய அரசு எப்பொழுதும் முழுமையான ஆதரவளிக்கும் என்று உறுதியளித்தார்.

மெட்ரோ ரயிலில் நடைபெற்ற இந்த உயர்நிலைச் சந்திப்பு தமிழகத் தொழில் வட்டாரத்தில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

ADVERTISEMENT