17,300 கோடி மதிப்புள்ளான அரசு திட்டங்களை தூத்துக்குடியில் துவக்கி வைக்கிறார் பிரதமர் மோடி
இரண்டு நாள் பயணமாக நேற்று தமிழ்நாட்டிற்கு வந்த பிரதமர் மோடி, இன்று தூத்துக்குடிக்கு செல்கிறார். அங்கே, வ.உ.சி துறைமுகத்தில், ரூபாய் 7.55 கோடி மதிப்பிலான வெளித்துறைமுகம், ரூ. 265.15 கோடி மதிப்பிலான வடக்கு சரக்கு தளம், ரூபாய் 124.32 கோடி மதிப்பில் 5 எம்.எல்.டி கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் மற்றும் பசுமை ஹைட்ரஜன் எரிபொருள் நிரப்பும் மையம் உள்ளிட்டவற்றிற்கு அடிக்கல் நாட்டுகிறார். அதனை தொடர்ந்து, குலசேகரப்பட்டினம் ராக்கெட் ஏவு தளத்திற்கு அடிக்கல் நாட்டுகிறார். இந்த ராக்கெட் ஏவுதளம், தமிழ்நாட்டில் அமையவுள்ள முதல் இஸ்ரோ ராக்கெட் ஏவுதளமாகும். இந்த ஏவுதளத்திற்கு அருகே தான், 2000 பரப்பளவில் விண்வெளி பூங்காவை தமிழ்நாடு அரசு அமைக்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
நெல்லை பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்கிறார் மோடி
அதன் பின்னர், ரூ.1477 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள உள்ள வாஞ்சி மணியாச்சி-நாகர்கோயில் வழித்தடத்தில் அமைந்துள்ள இரட்டை ரயில் பாதையை தொடங்கி வைக்கிறார் பிரதமர். அதேபோல நாடு முழுவதும் ரூபாய் 4,586 கோடி செலவில் கட்டி முடிக்கப்பட்டுள்ள தேசிய நெடுஞ்சாலைகளை நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார். தூத்துக்குடி மாவட்டத்தில், பிரதமர் இன்று அடிக்கல் நாட்டவுள்ள திட்டங்களின் மொத்த மதிப்பு, 17,300 கோடியாகும். அதன் பின்னர், திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள பாளையங்கோட்டை பெல் மைதானத்தில் நடைபெறும் பாஜகவின் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் பங்கேற்க உள்ளார். இதனால் தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் 5 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.