தீவிரவாத தாக்குதலால் பாதிக்கப்பட்டுள்ள இஸ்ரேலுக்கு துணையாக நிற்போம்- பிரதமர் மோடி
தீவிரவாத தாக்குதலால் பாதிக்கப்பட்டுள்ள இஸ்ரேலுக்கு துணையாக நிற்போம் என பிரதமர் நரேந்திர மோடி ட்வீட் செய்துள்ளார். பாலஸ்தீனிய போராளிகள் இஸ்ரேல் மீது நடத்திய தாக்குதலில் இதுவரை 22 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 500க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர். இச்சமயத்தில் மக்களிடம் பேசிய இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெத்தனியாகு "நாங்கள் போரில் உள்ளோம்" என பேசி இருந்தார். இந்நிலையில் தீவிரவாத தாக்குதலால் பாதிப்படைந்துள்ள இஸ்ரேலுக்கு, பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் ஆதரவை தெரிவித்துள்ளார். "இஸ்ரேல் மீது நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதல் கேட்டு அதிர்ச்சி அடைந்தேன். பாதிக்கப்பட்ட அப்பாவி மக்களுக்காக நாங்கள் பிரார்த்திக்கிறோம். இஸ்ரேலின் இந்த கடினமான சமயத்தில் நாங்கள் உடன் இருக்கிறோம்" என பதிவிட்டுள்ளார்.