
பிரதமர் மோடியின் நேரடி கண்காணிப்பில், தீவிரவாதிகளை குறிவைத்து நடத்தப்பட்ட 'ஆபரேஷன் சிந்தூர்', 9 தீவிரவாத முகாம்கள் அழிப்பு
செய்தி முன்னோட்டம்
பஹல்காமில் ஏப்ரல் 22-ஆம் தேதி நிகழ்ந்த பயங்கரவாதத் தாக்குதலில் 26 பேர், பெரும்பாலும் சுற்றுலா பயணிகள், உயிரிழந்த சம்பவத்திற்கு பதிலடியாக, இந்திய ராணுவம் "ஆபரேஷன் சிந்தூர்" என்ற பெயரிடப்பட்ட ஏவுகணை தாக்குதலை நடத்தியது.
இந்த நடவடிக்கை பிரதமர் நரேந்திர மோடியின் நேரடி கண்காணிப்பில் மேற்கொள்ளப்பட்டது என ஹிந்துஸ்தான் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த தாக்குதல்களில் பாகிஸ்தானும், பாகிஸ்தான் ஆக்கிரமித்த ஜம்மு-காஷ்மீரும் உள்ளடங்கிய பகுதிகளில் உள்ள ஒன்பது பயங்கரவாத முகாம்கள் அழிக்கப்பட்டன.
தாக்குதலில் 26 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாகவும், 55 பேர் காயமடைந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இலக்குகளின் பட்டியலில் ஜெய்ஷ் இ முகமது அமைப்பின் பஹாவல்பூர் தலைமையகம் மற்றும் லஷ்கர் இ தொய்பாவின் முரிட்கே தலைமையகம் அடங்குகின்றன.
நீதி
பஹல்காம் தாக்குதலில் உயிரிழந்த அப்பாவி பொதுமக்களுக்கு நீதி வழங்க ஆபரேஷன் சிந்தூர்
இந்திய பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், இந்த தாக்குதல்கள் மிகத் துல்லியமாகவும், அளவிடப்பட்டவையாகவும் இருந்தன என்று தெரிவித்தது.
"இந்தியாவைத் தாக்க நினைத்தவர்களுக்கு இது ஒரு கடுமையான எச்சரிக்கையாக இருக்கும்," என்று பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறினார்.
அவர் தனது சமூக ஊடகப் பதிவில் "பாரத் மாதா கி ஜெய்" என்றும் எழுதியுள்ளார்.
இந்த ராணுவ நடவடிக்கைக்கு "ஆபரேஷன் சிந்தூர்" என பெயரிடப்பட்டது.
பஹல்காம் தாக்குதலில் பலர் கணவர்களை இழந்ததன் நினைவாக, அவர்களின் துயரத்திற்கு நீதி விளைவிக்கவே இந்தப் பெயர் தேர்ந்தெடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
"சிந்தூர்" என்றால், திலகம் அல்லது பொட்டு என்று பொருள். இந்த பெயரை பிரதமர் தேர்வு செய்ததாகவும் கூறப்படுகிறது.
பாகிஸ்தான்
தாக்குதல் ஒரு 'போர் செயல்' என பாகிஸ்தான் குமுறல்
பாகிஸ்தான் தரப்பில், ராணுவ செய்தித் தொடர்பாளர் லெப்டினன்ட் ஜெனரல் அகமது ஷெரிப் சவுத்ரி, இந்தியா ஏவுகணைகள் மூலம் பாகிஸ்தானின் பாகங்கள் மற்றும் பிஓகே பகுதியை தாக்கியதாகக் கூறினார்.
பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் இந்த தாக்குதல்களை "போர்ச் செயல்" என்று விமர்சித்தார்.
பாகிஸ்தான் தேவையான நேரத்திலும், இடத்திலும் பதிலளிக்கும் என அவர் எச்சரித்தார்.