Loading...
பீகாரில் கங்கை நதியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள நிதிஷ் சேது பாலத்தை திறந்து வைத்தார் பிரதமர் மோடி
பீகாரில் கங்கை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள நிதிஷ் சேது பாலத்தை மோடி திறந்துவைத்தார்.

பீகாரில் கங்கை நதியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள நிதிஷ் சேது பாலத்தை திறந்து வைத்தார் பிரதமர் மோடி

எழுதியவர் Vasuki
Nov 21, 2026
04:47 pm

செய்தி முன்னோட்டம்

பீகார் மாநிலத்தில் கங்கை நதியின் குறுக்கே 14 ஆண்டுகாலக் கட்டுமானப் பணிகளுக்குப் பிறகு கட்டி முடிக்கப்பட்டுள்ள 9.76 கிலோமீட்டர் நீளமுள்ள பிரம்மாண்ட நிதிஷ் சேது ஆறு வழிப் பாலத்தைப் பிரதமர் நரேந்திர மோடி சனிக்கிழமையான இன்று (நவ. 21) நாட்டுக்கு அர்ப்பணித்துத் திறந்து வைத்தார். வைஷாலி மாவட்டத்தில் உள்ள பிதுபூர் வட்டாரத்தையும், பாட்னா புறநகர்ப் பகுதியான கச்சி தர்காவையும் இணைக்கும் வகையில் கேபிள் தொழில்நுட்பத்தில் (Cable-stayed bridge) இந்தப் பாலம் அமைக்கப்பட்டுள்ளது. முன்னதாக பாட்னா விமான நிலையத்திற்கு வந்தடைந்த பிரதமர் மோடியை, பீகார் முன்னாள் முதலமைச்சர் நிதிஷ் குமார் நேரில் வரவேற்றார். இருவரும் ஆரத்தழுவி உரையாடிய புகைப்படத்தைப் பகிர்ந்த பிரதமர், "நிதிஷ் குமார் ஜியைச் சந்தித்ததில் மிகுந்த மகிழ்ச்சி" எனக் குறிப்பிட்டுள்ளார்.

வளர்ச்சித் திட்டங்ள்

ரூ.34,470 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களும் 100 மின்சார பேருந்துகளும் தொடக்கம்

கடந்த மே மாதம் பீகாரின் முதல் பாஜக முதலமைச்சராக சாம்ராட் சௌத்ரி பதவியேற்று அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்ட பிறகு, பிரதமர் மோடி பீகார் மாநிலத்திற்கு மேற்கொள்ளும் முதல் பயணம் இதுவாகும்.

இந்தப் பயணத்தின்போது சாலை இணைப்பு, எரிசக்தி, நகர்ப்புற உள்கட்டமைப்பு, நீர் வளம், கல்வி மற்றும் சுகாதாரம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சுமார் ரூ.34,470 கோடி மதிப்பிலான முடிவுற்ற திட்டங்களைத் தொடங்கி வைத்து, புதிய திட்டங்களுக்குப் பிரதமர் அடிக்கல் நாட்டுகிறார்.

மேலும், தூய்மையான பொதுப் போக்குவரத்தை ஊக்குவிக்கும் வகையில் 100 பிஎம் இ-பேருந்துகளைக் கொடியசைத்துத் தொடங்கி வைப்பதோடு, பிரதமரின் நகர்ப்புற வீட்டுவசதித் திட்டத்தின் கீழ் 26,900-க்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கான புதுமனைப் புகுவிழா நிகழ்வுகளிலும் அவர் பங்கேற்கிறார்.

அரசியல் சர்ச்சை

பாலத்திற்கு நிதிஷ் குமார் பெயர் சூட்டப்பட்டதால் வெடித்த அரசியல் சர்ச்சை

இந்தப் பாலம் திட்டமிடப்பட்டு நிறைவடையும் தருவாய்க்குக் கொண்டு வரப்பட்ட காலத்தில் முதலமைச்சராக இருந்த நிதிஷ் குமாரைக் கௌரவிக்கும் வகையில் பாலத்திற்கு நிதிஷ் சேது எனப் பெயரிடப்பட்டுள்ளது.

இருப்பினும், இப்பாலத்திற்கு நிதிஷ் குமாரின் பெயர் சூட்டப்பட்டிருப்பது ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கும் (NDA), பிரதான எதிர்க்கட்சியான ராஷ்டிரிய ஜனதா தளத்திற்கும் (RJD) இடையே கடும் வார்த்தைப் போரைத் தூண்டியுள்ளது.

நிதிஷ் குமாருடன் குறுகிய காலம் ஆட்சியில் பங்கு வகித்த ஆர்ஜேடி கட்சி, இந்தத் திட்டத்தின் வெற்றியில் தங்களுக்கும் பங்கு இருப்பதாக உரிமை கோரி வருவதால் பீகார் அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ADVERTISEMENT