நேபாள சாலை விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ₹2 லட்சம் இழப்பீடு அறிவித்த பிரதமர் மோடி
நேபாளத்தின் தஹாஹுன் மாவட்டத்தில் நடந்த சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு பிரதமர் மோடி இழப்பீடு அறிவித்துள்ளார். இதுகுறித்து பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு பிரதமர் தேசிய நிவாரண நிதியில் இருந்து ₹2 லட்சம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், விபத்தில் காயம் அடைந்தவர்களுக்கு ₹50,000 வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தற்போது 41 ஆக உயர்ந்துள்ளதாக மகாராஷ்டிர அமைச்சர் கிரிஷ் மகாஜன் தெரிவித்துள்ளார். இந்திய சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் சென்ற பேருந்து வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 24) நேபாள நெடுஞ்சாலையில் இருந்து ஆற்றில் கவிழ்ந்து விபத்திற்குள்ளானது குறிப்பிடத்தக்கது.
உயிரிழந்தவர்களின் உடல்களை கொண்டு வரும் பணியில் இந்திய விமானப்படை
இந்திய விமானப்படை விமானம் விபத்தில் உயிரிழந்த மகாராஷ்டிரா யாத்ரீகர்களின் உடல்களை நாசிக்கிற்கு கொண்டு வரும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடம் பேசி அனைத்து உதவிகளையும் செய்வதாக உறுதியளித்தார். கோரக்பூரில் இருந்து நாசிக்கிற்கு சிறப்பு விமானம் பறக்க வாய்ப்புள்ளது. அதற்கான அனைத்து செலவையும் மாநில அரசே ஏற்கும் என ஐஏஎன்எஸ் செய்தி வெளியிட்டுள்ளது. மோசமான சாலைகள், மோசமாக பராமரிக்கப்படும் வாகனங்கள் மற்றும் கவனக்குறைவாக வாகனம் ஓட்டுதல் ஆகியவற்றின் விளைவாக நேபாள நாட்டில் கொடிய விபத்துக்கள் ஒப்பீட்டளவில் பொதுவானவையாக உள்ளது. சித்வானில் ஏற்பட்ட நிலச்சரிவில் 59 பயணிகளுடன் இரண்டு பேருந்துகள் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட ஒரு மாதத்திற்குப் பிறகு இந்த விபத்து ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.