பீகார்: மேம்பாலத்தின் கீழ் சிக்கிய விமானத்தால் பெரும் போக்குவரத்து நெரிசல்
பீகாரின் மோதிஹாரி தெருவில் ஏர் இந்தியா விமானம் ஒன்று மேம்பாலத்தின் அடியில் வெள்ளிக்கிழமை சிக்கியதால், போக்குவரத்துக்கு பெரும் இடையூறு ஏற்பட்டது. பழுதடைந்த விமானம் மும்பையில் இருந்து அசாமுக்கு லாரியில் கொண்டு செல்லப்பட்டபோது, பிப்ரகோதி பகுதியில் உள்ள மேம்பாலத்தின் அடியில் சிக்கிக்கொண்டதால் போக்குவரத்து ஸ்தம்பித்தது. இந்த வினோத காட்சியை காண, அப்பகுதி மக்களும், வாகன ஓட்டிகளும் அங்கு கூட தொடங்கினர். மேலும், சிலர் அந்த விமானத்துடன் செல்பி எடுத்துக்கொண்டனர். மேம்பாலத்தின் உயரத்தை லாரி ஓட்டுனர் தவறாக கணக்கிட்டு, லாரியை இயக்கியதாலேயே அது சிக்கிக் கொண்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சக்கரங்களில் இருந்து காற்று வெளியற்றப்பட்டு மீட்கப்பட்ட லாரி
இரவு 9 மணி அளவில், காவல்துறையினர் மற்றும் பிற லாரி ஓட்டுனர்களின் நீண்ட நேர போராட்டத்திற்கு பின்னர், அந்த லாரியில் இருந்த அனைத்து சக்கரங்களில் காற்று வெளியேற்றப்பட்டு, லாரி பத்திரமாக மீட்கப்பட்டதாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் ஹிந்துஸ்தான் டைம்ஸ் இடம் தெரிவித்தனர். கடந்த 2022 ஆம் ஆண்டு, கொச்சியில் இருந்து ஹைதராபாத்திற்கு விமானம் ஏற்றி சென்ற லாரி, ஆந்திராவின் பாபட்லா மாவட்டத்தில் மேம்பாலத்திற்கு அடியில் இதே போல் சிக்கிக்கொண்டது. பின்னர் காவல்துறையினர் சில மணி நேர போராட்டத்திற்கு பின்னர், அந்த லாரியை கயிறு கட்டி பத்திரமாக மீட்டனர்.