மற்றுமொரு ஆடுஜீவிதம்.. இணையத்தில் வைரலாகும் பகிர்ந்த நெஞ்சை உருக்கும் வீடியோ
இந்தாண்டு மலையாளத்தில் வெளியான 'ஆடுஜீவிதம்' திரைப்படத்தில், அரேபிய நாட்டின் பாலைவனத்தில் சிக்கிய ஒரு மனிதனின் வாழ்க்கையை வெளிச்சம் போட்டு காட்டியது. வெளிநாட்டில் வேலை, அதிக சம்பளம் போன்றவற்றிற்கு ஆசைப்பட்டு, துபாய் பாலைவனத்தில் கொத்தடிமைக்கு நிகரான வேலையில் சிக்கி கொள்ளும் அப்பாவி இளைஞர்களின் கதைகளை கேட்டிருப்பீர்கள். இந்த நிலை மாறி இருக்கும் என நீங்கள் நினைத்தால், அது தான் இல்லை. தற்போது இணையத்தில் வைரலாக பரவி வரும் ஒரு வீடியோவில், ஆந்திராவில் இருந்து சென்று துபாய் பாலைவனத்தில் கொத்தடிமையாக சிக்கிய ஒரு நபர் தன்னை காப்பாற்றுமாறு கதறியுள்ளார். அந்த வீடியோ பதிவை எக்ஸ் தளத்தில் பதிவேற்றி, வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு டேக் செய்யப்பட்டுள்ளது.
வைரலாகும் வீடியோ
'2 கிமீ.,க்கு தண்ணீர் இல்லை; பேச மனிதர்கள் இல்லை'
இந்த வீடியோவில் பாலைவனத்தில் சிக்கியுள்ள அந்த நபர்,"இங்குள்ள ஆடுகள், கோழிகள், நாய்களுக்கு நான் தான் உணவளிக்க வேண்டும். அவற்றை கவனித்துக்கொள்ள வேண்டும். ஆனால் எனக்கு உணவளிக்கவோ, பேச்சு துணைக்கோ இங்கே யாருமே இல்லை. நான் ஒருவனாக இந்த மிருகங்களுடன் வாழ வேண்டி உள்ளது" "நான் இங்கே வந்து 3 நாட்கள் ஆகி விட்டது. ஆனால் நான் சாப்பிட்டேன், உயிரோடு இருக்கிறேனா இல்லையா என கேட்க கூட ஆள் இல்லை இங்கே. இது நரகம் போல உள்ளது. என்னை யாரவது காப்பாற்றுங்கள். இந்த கொளுத்தும் வெயிலில் நான் தனியாக மாட்டிக்கொண்டேன்" "இங்கிருந்து போக பணம் கேட்கிறார்கள். என்னிடம் அவ்வளவு பணம் இல்லை. இன்னும் 2 நாட்கள் இதே சூழலில் இருந்தால் நான் இறந்துவிடுவேன்" எனக்கூறியுள்ளார்.
மோசடியான ஆட்சேர்ப்பு முறைகளும், சிக்கி தவிக்கும் தொழிலாளர்களும்
சமீபத்தில் குவைத்தில் நடைபெற்ற மிகப்பெரிய தீ விபத்தில் இந்தியாவை சேர்ந்த இடம்பெயர்ந்த தொழிலாளர்கள் உட்பட பலர் இறந்தனர். இந்த சம்பவம் புலம்பெயர் தொழிலாளர்களின் மோசமான உரிமை மீறல்களையும் அவர்களின் நன்றாக வாழ்க்கையையும் வெளிச்சம் போட்டு காட்டுகிறது. முறைகேடான மற்றும் மோசடியான ஆட்சேர்ப்பு நடைமுறைகள் மற்றும் சொந்த நாட்டிற்கு திரும்புவதற்கு தொழிலாளர் இடம்பெயர்வு தொடர்பான அதிக செலவுகள் தவிர, இது போன்ற வளைகுடா நாடுகளில் (ஓமன், சவுதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், குவைத், கத்தார், பஹ்ரைன்) இடம்பெயர்ந்த தொழிலாளர்கள், கஃபாலா என்றழைக்கப்படும் முதலாளி-பணியாளருக்கு இடையேயான தொழிலாளர் ஒப்பந்த முறையைப் பின்பற்றுகின்றன. இது தொழிலாளர்களின் உரிமை மீறல்கள், இது நவீன கால அடிமைத்தனத்தை அடிக்கோடிட்டு காட்டுகிறது.