பங்களாதேஷ் புதிய அமைச்சரவையில் ஒரு இந்து தலைவர்! நிதாய் ராய் சௌத்ரிக்கு அமைச்சர் பதவி
செய்தி முன்னோட்டம்
பங்களாதேஷில் புதிய அரசு பொறுப்பேற்றுள்ள நிலையில், அந்நாட்டின் தேசியவாத கட்சியின் (BNP) மூத்த தலைவரும், இந்து சமூகத்தை சேர்ந்தவருமான நிதாய் ராய் சௌத்ரி செவ்வாய்க்கிழமை அன்று அமைச்சராக பதவியேற்றார். 50 உறுப்பினர்களை கொண்ட இந்த அமைச்சரவையில் இவரது வருகை, பிஎன்பி தலைமையிலான அரசில் சிறுபான்மையினருக்கு வழங்கப்பட்டுள்ள முக்கியத்துவமாக பார்க்கப்படுகிறது. புதிய அமைச்சரவையில் 25 அமைச்சர்கள், 24 மாநில அமைச்சர்கள் மற்றும் மூன்று தொழில்நுட்ப வல்லுநர்கள் இடம்பெற்றுள்ளனர். மிர்சா பக்ருல் இஸ்லாம் ஆலம்கீர், அமீர் காஸ்ரு மஹ்மூத் சௌத்ரி உள்ளிட்ட மூத்த தலைவர்களுடன் நிதாய் ராய் சௌத்ரியும் பதவியேற்றார். இந்த விழாவில் இந்தியாவின் சார்பில் லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லா கலந்துகொண்டது குறிப்பிடத்தக்கது.
விவரங்கள்
யார் இந்த நிதாய் ராய் சௌத்ரி?
1949-இல் பிறந்த நிதாய் ராய், ஒரு மூத்த வழக்கறிஞர் மற்றும் தசாப்த கால அரசியல் அனுபவம் கொண்டவர். தாக்கா பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றவர். தொடக்கத்தில் மாணவர் சங்கத்தில் தனது அரசியல் பயணத்தை தொடங்கிய இவர், 1988-இல் முதன்முதலில் நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். நிதாய் ராய், கல்வி, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு, சட்டம் மற்றும் நீதி ஆகிய துறைகளில் மாநில அமைச்சராகவும், சில காலம் அமைச்சராகவும் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். முன்னாள் அதிபர் எர்ஷாத்தின் ஆட்சிக்கு பிறகு BNP-யில் இணைந்த இவர், தற்போது அக்கட்சியின் துணைத் தலைவராகவும், கொள்கை முடிவு எடுக்கும் உயர்நிலைக் குழுவின் உறுப்பினராகவும் உள்ளார். இம்முறை தேர்தலில் வெற்றி பெற்ற நான்கு சிறுபான்மையின வேட்பாளர்களில் இவரும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.