கச்சா எண்ணெய் விலையை அதிரடியாக குறைத்த சவுதி அரேபியா: பெட்ரோல், டீசல் விலை குறையுமா?
செய்தி முன்னோட்டம்
சர்வதேச எரிசக்தி சந்தையை அதிரவைக்கும் வகையில், ஆசிய வாடிக்கையாளர்களுக்கான தனது முதன்மை அரப் லைட் கச்சா எண்ணெய்யின் விலையை சவுதி அரேபியா வரலாறு காணாத அளவில் குறைத்துள்ளது. அமெரிக்கா -ஈரான் மோதலுக்கு பிறகு கச்சா எண்ணெய் விலை உச்சத்தைத் தொட்டிருந்த நிலையில், தற்பொழுது சவுதி அரேபியா எடுத்துள்ள இந்த முடிவு உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது. ஆகஸ்ட் மாத விநியோகத்திற்காக, ஆசிய நாடுகளுக்கு ஒரு பேரல் கச்சா எண்ணெய்யின் விலையைச் சவுதி அரேபியா 11 டாலர் வரை குறைத்துள்ளது. ஓமன்-துபாய் சந்தை விலையை விட 1.50 டாலர் தள்ளுபடி விலையில் இந்த கச்சா எண்ணெய் வழங்கப்பட உள்ளது. கடந்த 26 ஆண்டுகளில் சவுதி அரேபியா மேற்கொண்ட மிகப்பாரிய மாதாந்திர விலை குறைப்பு இதுவாகும்.
பின்னணி
திடீர் விலை குறைப்பிற்கான பின்னணி
அமெரிக்கா-ஈரான் மோதல் காரணமாக, உலகளாவிய கச்சா எண்ணெய் போக்குவரத்தில் 20%-ஐ கையாளும் முக்கியமான ஹார்முஸ் நீரிணை பகுதியில் பாதிப்பு ஏற்பட்டது. ஆனால், தற்பொழுது அங்கு நிலைமை சீராகி, வளைகுடா நாடுகளின் எண்ணெய் ஏற்றுமதி பழைய நிலைக்குத் திரும்பியுள்ளது. அதே நேரத்தில், OPEC+ கூட்டமைப்பு ஆகஸ்ட் முதல் தினசரி 1,88,000 பேரல் கூடுதல் எண்ணெய்யை உற்பத்தி செய்ய ஒப்புக்கொண்டுள்ளதுடன், UAE போன்ற நாடுகளும் உற்பத்தியை அதிகரித்துள்ளன. இதன் காரணமாக சந்தையில் தட்டுப்பாட்டிற்கு பதிலாக கூடுதல் வரத்து அதிகரித்துள்ளது. குறிப்பாக, உலகின் மிகப்பெரிய நுகர்வோரான சீனாவின் பொருளாதார மந்தநிலை காரணமாக உலகளாவிய தேவையும் குறைந்துள்ளது. இந்தச் சூழலில், தனது சந்தைப் பங்கை காப்பாற்றிக் கொள்ளவே சவுதி அரேபியா இந்த அதிரடி விலை குறைப்பை அறிவித்துள்ளது.
ஆசிய சந்தை
ஆசிய சந்தையும் ரஷ்யாவின் போட்டியும்
சவுதி அரேபியாவிற்கு இந்தியா, சீனா, ஜப்பான் மற்றும் தென் கொரியா ஆகிய ஆசிய நாடுகள்தான் மிக முக்கியமான மற்றும் மிகப்பெரிய வாடிக்கையாளர்கள் ஆகும். ஆனால், உக்ரைன் போருக்கு பின் மேற்கத்திய நாடுகள் விதித்த தடைகளால், ரஷ்யா தனது கச்சா எண்ணெய்யை தள்ளுபடி விலையில் ஆசியாவிற்கு திருப்பியது. இதனால் இந்தியா மற்றும் சீனா ஆகிய நாடுகள் ரஷ்யாவிடமிருந்து அதிகளவில் கச்சா எண்ணெய்யை வாங்கத் தொடங்கின. ரஷ்யாவின் இந்த பலத்த போட்டியை சமாளிக்கவும், ஆசிய சுத்திகரிப்பு நிலையங்கள் தங்களை விட்டுப் போகாமல் இருக்கவுமே சவுதி தற்பொழுது விலையை குறைத்துள்ளது.
இந்தியா
இந்தியாவுக்கு என்ன பலன்? பெட்ரோல், டீசல் விலை குறையுமா?
இந்தியா தனது கச்சா எண்ணெய் தேவையில் 85 சதவீதத்திற்கும் மேலாக இறக்குமதி செய்வதால், இந்த விலை குறைப்பு இந்திய பொருளாதாரத்திற்கு பல்வேறு நன்மைகளைத் தரும் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைவதால் இந்தியாவின் ஒட்டுமொத்த இறக்குமதிச் செலவு பெருமளவு குறையும். இது நாட்டின் நடப்புக் கணக்கு பற்றாக்குறையைக் குறைப்பதுடன், பணவீக்கத்தை கட்டுப்படுத்தவும், அரசின் நிதி நிலையை மேம்படுத்தவும் உதவும். விமான போக்குவரத்து, லாஜிஸ்டிக்ஸ், உற்பத்தி மற்றும் போக்குவரத்து துறைகளின் இயக்க செலவுகள் குறையும்.
விலை
சில்லறை விலை உடனடியாக குறையுமா?
கச்சா எண்ணெய் விலை குறைந்தாலும், இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உடனடியாக குறையாது. ஏனெனில், உள்நாட்டு எரிபொருள் விலையானது கச்சா எண்ணெய் விலை, சுத்திகரிப்பு நிறுவனங்களின் லாப வரம்பு, சரக்குக் கட்டணம், டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, மத்திய-மாநில அரசுகளின் வரிகள் மற்றும் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களின் முடிவுகளைப் பொறுத்தே அமையும். சர்வதேச சந்தையில் இந்த விலை வீழ்ச்சி நீண்ட நாட்களுக்கு நீடித்தால் மட்டுமே அதன் பலன் இந்திய வாகன ஓட்டிகளுக்கு கிடைக்க வாய்ப்புள்ளது. தற்பொழுது சர்வதேச சந்தையில் பிரெண்ட் கச்சா எண்ணெய் ஒரு பேரல் 72 டாலராகவும், அமெரிக்க டபிள்யூடிஐ (WTI) கச்சா எண்ணெய் 69 டாலராகவும் வர்த்தகமாகி வருகிறது.