கண்ணீருடன் விடைபெற்ற ரொனால்டோ: உலகக்கோப்பை கனவு முடிவுக்கு வந்ததாக அறிவிப்பு; ஆனால் சர்வதேச போட்டிகளில் ஓய்வா?
செய்தி முன்னோட்டம்
கால்பந்து உலகின் முடிசூடா மன்னனாக திகழும் 41 வயது கிறிஸ்டியானோ ரொனால்டோவின் உலகக்கோப்பை கனவு அதிகாரப்பூர்வமாக முடிவுக்கு வந்துள்ளது. நடப்பு உலகக்கோப்பையின் 16-வது சுற்று நாக்-அவுட் போட்டியில் ஸ்பெயின் அணியிடம் 1-0 என்ற கணக்கில் போர்ச்சுகல் அதிர்ச்சி தோல்வி அடைந்து வெளியேறியதைத் தொடர்ந்து, இதுவே தனது கடைசி உலகக்கோப்பை போட்டி என்பதை ரொனால்டோ உறுதிப்படுத்தியுள்ளார். இருப்பினும், போர்ச்சுகல் தேசிய அணியிலிருந்து தற்போதைக்கு தான் ஓய்வு பெறப்போவதில்லை என்றும், தோல்வியின் விரக்தியில் எந்தவொரு அவசர முடிவையும் எடுக்க விரும்பவில்லை என்றும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.
வீழ்ச்சி
ஸ்பெயினிடம் வீழ்ந்த போர்ச்சுகல்; கண்ணீரில் ரொனால்டோ
விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த நாக்-அவுட் போட்டியில் ஸ்பெயின் அணி 1-0 என போர்ச்சுகலை வீழ்த்தி கால் இறுதிக்கு முன்னேறியது. போட்டி முடிந்தவுடன், உலகக்கோப்பையை வெல்லும் தனது வாழ்நாள் கனவு சிதைந்ததை எண்ணி ரொனால்டோ மைதானத்திலேயே கண்ணீர் விட்டு அழுதார். 2006-ஆம் ஆண்டு தொடங்கி மொத்தம் 6 உலகக்கோப்பைத் தொடர்களில் விளையாடியுள்ள ரொனால்டோவுக்கு, இறுதிவரை அந்த ஒரு தங்கக் கோப்பை மட்டும் எட்டாக்கனியாகவே கலைந்து போயுள்ளது.
விளக்கம்
அவசர முடிவு எடுக்க மாட்டேன்: CR7 விளக்கம்
போட்டிக்குப் பிறகு உணர்ச்சிவசப்பட்ட நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய போர்ச்சுகல் கேப்டன் ரொனால்டோ,"உலகக்கோப்பையிலிருந்து இப்படி வெளியேறுவது எனக்கு மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது. நான் எனது முழுத் திறமையையும் வெளிப்படுத்தினேன்". "ஆம், இது எனது கடைசி உலகக்கோப்பை போட்டிதான். ஆனால், சர்வதேச போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவது குறித்து நான் தற்பொழுது எந்தவொரு அவசர முடிவையும் எடுக்க மாட்டேன். இப்போது எனக்கு எனது குடும்பத்துடன் செலவிட நேரம் தேவைப்படுகிறது. நாளை காலை நான் எப்போதும் போல தெளிவான மனசாட்சியுடன் எழுவேன்" என்று கூறினார்.
பெருமிதம்
"எனக்கு முன்னால் போர்ச்சுகல் எதையும் வென்றதில்லை"
"நான் தேசிய அணிக்காக 23 ஆண்டுகள் விளையாடி 3 முக்கியக் கோப்பைகளை வென்று கொடுத்துள்ளேன். கிறிஸ்டியானோ ரொனால்டோ என்ற நான் வருவதற்கு முன்பு போர்ச்சுகல் அணி வரலாற்றில் எதையுமே வென்றதில்லை". "நாங்கள் வென்ற யூரோ கோப்பையே எனக்கு மிக முக்கியமானது. உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால், என்னைப்பொறுத்தவரை 2016 யூரோ கோப்பை வெற்றியானது ஒரு உலகக்கோப்பையை வென்றதற்கு இணையான பெருமை வாய்ந்தது" என்று நெஞ்சை நிமிர்த்திப் பேசினார். உலகக்கோப்பையை வெல்ல முடியாமல் போனாலும், 23 ஆண்டுகால சர்வதேச கால்பந்து வரலாற்றில் போர்ச்சுகல் அணியை உலக அளவில் மிக உயர்ந்த இடத்திற்குக் கொண்டு சென்ற பெருமையோடு, தனது கடைசி உலகக்கோப்பை அத்தியாயத்தை ரொனால்டோ நிறைவு செய்துள்ளார்.