Loading...
கால்பந்து வளர்ச்சிக்காக $6.35 பில்லியன் நிதி ஒதுக்க FIFA புதிய திட்டம்
கால்பந்து வளர்ச்சிக்காக $6.35 பில்லியன் நிதி ஒதுக்க ஃபிஃபா முன்மொழிந்துள்ளது.

கால்பந்து வளர்ச்சிக்காக $6.35 பில்லியன் நிதி ஒதுக்க FIFA புதிய திட்டம்

எழுதியவர் Vasuki
Oct 14, 2026
04:39 pm

செய்தி முன்னோட்டம்

சர்வதேச கால்பந்து சம்மேளனம் (FIFA), உலகளவில் கால்பந்து விளையாட்டை அடிமட்ட அளவில் இருந்து பிரம்மாண்டமாக வளர்த்தெடுக்கும் நோக்கில், 2027 முதல் 2030 வரையிலான அடுத்த நான்காண்டு காலத்திற்கு சுமார் 6.35 பில்லியன் அமெரிக்க டாலர் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.53,000 கோடிக்கு மேல்) மதிப்பிலான வளர்ச்சி நிதியை ஒதுக்கீடு செய்யப் பரிந்துரைத்துள்ளது. பிஃபா காங்கிரஸின் ஒப்புதலுக்கு காத்திருக்கும் இந்தத் திட்டத்தின்படி, அமைப்பில் உள்ள 211 உறுப்பு நாடுகளின் கால்பந்து கூட்டமைப்புகளுக்கும் தலா 25 மில்லியன் டாலர்கள் (சுமார் ரூ.210 கோடி) நிதிப் பகிர்வாக வழங்கப்படவுள்ளது.

நிதி ஒதுக்கீடு

பிரம்மாண்ட இலக்கு

முன்னதாக ஒரு கூட்டமைப்புக்கு 10 மில்லியன் டாலர் மட்டுமே வழங்கப்படும் எனத் திட்டமிடப்பட்டிருந்த நிலையில், தற்போது அது இரண்டரை மடங்குக்கும் மேலாக அதிகரிக்கப்பட்டு 25 மில்லியன் டாலராக உயர்த்தப்பட்டுள்ளது.

நடப்பாண்டு 48 அணிகள் பங்கேற்று மிகப்பெரிய வணிக ரீதியான வெற்றியை பெற்ற உலகக் கோப்பை தொடரின் வருவாயைத் தொடர்ந்து, பிஃபா தனது இருப்பு நிதியில் இருந்து சுமார் 3.5 பில்லியன் டாலர்களை இந்த பிரம்மாண்ட மேம்பாட்டுத் திட்டத்திற்காகப் பயன்படுத்த முடிவு செய்துள்ளது.

மேலும், சர்வதேச அளவில் உள்ள ஆறு கண்டங்களின் கால்பந்து கூட்டமைப்புகளுக்குத் தலா 99 மில்லியன் டாலர்கள் வீதம் ஒதுக்கீடு செய்யப்பட்டு, குறிப்பாக மகளிர் மற்றும் இளையோர் கால்பந்து உள்கட்டமைப்பு பணிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படவுள்ளது.

விமர்சனம்

தலைமைக்கான சவால்கள்

அதேவேளையில், பிஃபா தலைவர் கியானி இன்பான்டினோவின் நிதி நிர்வாக அணுகுமுறைகள் குறித்து ஐரோப்பிய கால்பந்து கூட்டமைப்புகள் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வரும் சூழலில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

முன்னதாக உலகக் கோப்பைக்கான தனியார் முதலீட்டுத் திட்டம் கடுமையான எதிர்ப்பால் தொடங்கப்பட்ட சில நாட்களிலேயே கைவிடப்பட்ட நிலையில், தற்போது அனைத்து தேசிய கூட்டமைப்புகளுக்கும் சமமான மற்றும் கூடுதல் நிதி பகிர்வை வழங்குவதன் மூலம் உறுப்பு நாடுகளை வலுப்படுத்த பிஃபா தலைமை திட்டமிட்டுள்ளது.

ADVERTISEMENT