Loading...
வுகான் ஓபன் டென்னிஸ் 2026: செரீனா வில்லியம்ஸ் சாதனையை முறியடித்த இகா ஸ்வியாடெக்
செரீனா வில்லியம்ஸின் 148 WTA 1000 வெற்றிகள் சாதனையை இகா ஸ்வியாடெக் முறியடித்துள்ளார்.

வுகான் ஓபன் டென்னிஸ் 2026: செரீனா வில்லியம்ஸ் சாதனையை முறியடித்த இகா ஸ்வியாடெக்

எழுதியவர் Vasuki
Oct 14, 2026
04:01 pm

செய்தி முன்னோட்டம்

சீனாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் வுகான் ஓபன் மகளிர் டென்னிஸ் தொடரில், போலந்தின் முன்னணி நட்சத்திர வீராங்கனை இகா ஸ்வியாடெக் தனது அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறியுள்ளார். சக நாட்டு வீராங்கனையான மேக்தலேனா பிரெச்சை 6-2, 6-1 என்ற நேர் செட்களில் எளிதில் வீழ்த்திய அவர், நடப்பு 2026 சீசனில் தனது 40-வது வெற்றியைப் பதிவு செய்து அசத்தியுள்ளார். இந்த மகத்தான வெற்றியின் மூலம் டென்னிஸ் உலகின் ஜாம்பவான் செரீனா வில்லியம்ஸின் முக்கிய சாதனையை அவர் முறியடித்துள்ளார்.

வரலாற்று சாதனை

செரீனா வில்லியம்ஸ் சாதனையை முறியடிப்பு

கடந்த 2009-ஆம் ஆண்டு டபிள்யூடிஏ 1000 போட்டி வடிவம் அறிமுகப்படுத்தப்பட்டதில் இருந்து, பிரதான சுற்றுகளில் அதிக வெற்றிகளைப் பதிவு செய்த வீராங்கனைகள் பட்டியலில் செரீனா வில்லியம்ஸ் 148 வெற்றிகளுடன் இருந்து வந்தார்.

தற்போது தனது 149-வது வெற்றியைப் பதிவு செய்துள்ள ஸ்வியாடெக், செரீனாவை பின்னுக்குத் தள்ளி அனைத்துக் காலத்திற்குமான சாதனையாளர்கள் பட்டியலில் 7-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

மேலும், தொடர்ந்து ஐந்து சீசன்களில் தலா 40 வெற்றிகளுக்கும் மேல் பதிவு செய்த வீராங்கனை என்ற பெருமையையும் பெற்று, சர்வதேச டென்னிஸ் அரங்கில் தனது அசைக்க முடியாத ஆதிக்கத்தை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளார்.

அடுத்த சுற்று வாய்ப்பு

அனல் பறந்த பேஸ்லைன் ஆட்டம் 

ஆட்டத்தின் தொடக்க செட்டில் ஆரம்பத்திலேயே தனது சர்வீஸ் கேமை இழந்து லேசான பின்னடைவைச் சந்தித்தாலும், உடனடியாக சுதாரித்துக்கொண்ட ஸ்வியாடெக் தனது அனல் பறக்கும் கிரவுண்ட் ஸ்ட்ரோக்குகளால் ஆட்டத்தைத் தனது முழு கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தார்.

முதல் செட்டை 6-2 எனக் கைப்பற்றிய அவர், இரண்டாவது செட்டிலும் முழு ஆதிக்கம் செலுத்தி 6-1 என்ற கணக்கில் ஆட்டத்தை மிகக் குறுகிய நேரத்தில் முடித்து வைத்தார்.

வெற்றி குறித்துப் பேசிய ஸ்வியாடெக், "எதிராளியின் வேகத்திற்கு ஏற்ப அவசரப்படாமல் நிதானமாகவும் நேர்த்தியாகவும் விளையாட வேண்டும் என்ற திட்டத்தை வெற்றிகரமாகச் செயல்படுத்தினேன்" என்று தெரிவித்தார்.

காலிறுதிக்கு முந்தைய சுற்றில் ஆஷ்லின் குருகர் அல்லது லான்லானா தாரருதீ ஆகியோரில் வெற்றி பெறுபவரை ஸ்வியாடெக் எதிர்கொள்ளவுள்ளார்.

ADVERTISEMENT